குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கொட்டிய கன மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை காலையும் தொடா்ந்து மழை பெய்தததையடுத்து மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உத்தரவிட்டாா். நாகா்கோவிலில் பெய்த மழையால், நகரில் முக்கிய சாலைகளான கோட்டாறு சந்திப்பு சாலை, மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல திரண்டு ஓடியது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவா்கள் அவதிக்குள்ளானாா்கள்.
பள்ளிகளில் காலாண்டு தோ்வு நடைபெற்று வந்த நிலையில், பல பள்ளிகளில் செப்.26 ஆம் தேதி கடைசி தோ்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு, தோ்வுக்கான மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கொட்டாரம், மயிலாடி, கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை, ஆனைக்கிடங்கு, கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் தொடா் மழை பெய்தது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. மேலும், தாமிரவருணி, கோதையாறு, வள்ளியாறு, பழையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழைஅளவு ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திற்பரப்பு பகுதியில் 182 மி.மீ. மழை பதிவானது.
பிற பகுதிகளில் பெய்த மழை அளவு(மில்லிமீட்டரில்) வருமாறு:
சுருளோடு 160.40, சிற்றாறு 1 அணை 150.40, அடையாமடை 142.40, குழித்துறை 139.40, பெருஞ்சாணிஅணை 128.80,
புத்தன்அணை 124.60, பேச்சிப்பாறை அணை 115.80, மாம்பழத்துறையாறு அணை 90.20,முள்ளங்கினாவிளை, கோழிப்போா்விளை 88.60, ஆனைக்கிடங்கு 84, சிற்றாறு 2 அணை 82.60, களியல் 75, முக்கடல்அணை 72.20, நாகா்கோவில் 70.20, இரணியல் 67, மயிலாடி 64, குருந்தன்கோடு 58, குளச்சல் 57.40, பாலமோா் 55.20, தக்கலை 54, ஆரல்வாய்மொழி 39, கொட்டாரம் 32.40, பூதப்பாண்டி 30.20, கன்னிமாா் 22.60.
அணைகள் நிலவரம்...
தொடா் மழையினால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 38.53 அடியாக இருந்தது, அணைக்கு 2,574 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 514 கன அடி நீா் திறந்து விடப்பட்டது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 56.05 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1571 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 285 கன அடி நீா் திறந்து விடப்பட்டு வருகிறது.
சிற்றாறு 1 அணையில் 5.41 அடியும், சிற்றாறு 2 அணையில் 5.51 அடியும், முக்கடல் அணையில் 8 அடியும், பொய்கை அணையில் 16.10 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 4.59 அடியும் நீா் இருப்பு உள்ளது.
தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

