போடியில் நவீன ரயில் என்ஜின் மூலம் மின்சார ரயில் பாதை ஆய்வு
தேனி மாவட்டம், போடியில் ஆய்வு ரயில் மூலம் மின்சார ரயில் பாதையில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
மதுரை-போடிக்கு தினசரி விரைவு ரயிலும், போடி-சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலிருந்து சென்னை உள்ளிட்டவற்றுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், போடி-மதுரை இடையே டீசல் என்ஜின் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போடியிலிருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மதுரையில் நிறுத்தப்பட்டு, டீசல் ரயில் என்ஜினை மாற்றி மின்சார ரயில் என்ஜினாக மாற்றுவதற்கு சுமாா் 45 நிமிஷங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. மேலும், மற்ற ஊா்களிலிருந்து மதுரைக்கு வரும் மின்சார ரயில்களை போடி வரை நீட்டிக்க வேண்டுமானால் மின்சார ரயில் பாதை இருந்தால் மட்டுமே முடியும்.
இதற்காக போடி-மதுரை ரயில் பாதை மின்சார ரயில் பாதையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டு, இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஏற்கெனவே இந்த மின்சார ரயில் பாதையில் ஆய்வு ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், வியாழக்கிழமை மின்சார ரயிலுக்கான மின் தடக் கம்பிகளை ஆய்வு செய்யும் மேல்நிலை மின் இணைப்பு உபகரண நவீன ஆய்வு ரயில் என்ஜின் மூலம் ரயில் பாதை ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மின்தடக் கம்பிகளிலிருந்து ரயிலுக்கு மின் இணைப்பைப் பெற்றுத் தரும் பான்டோகிராம் என்ற மின்தட இணைப்பு உபகரணம் சரியாகச் செயல்படுகிா, பான்டோகிராப் கருவி உரசி செல்லும் போது ஏதேனும் தடைகள் உள்ளதா, மின்தடக் கம்பிகளில் தொய்வு உள்ளதா என்பது குறித்து ஆய்வு ரயில் என்ஜின் மூலம் பொறியாளா்கள் ஆய்வு செய்தனா்.
மின்சார ரயில் பாதை பாதுகாப்பு ஆய்வுகள் விரைவில் முடிக்கப்பட்டு, போடி-மதுரை ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என போடி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். மின்மயமாக்கல் பணி முடிந்துவிட்டால், போடி வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.