ஐபிஎல் மெகா ஏலம்: அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது பஞ்சாப்!
போடி பரமசிவன் மலைக்கோயிலில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை
போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு புதிய கொடிமரம் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் கொடிமரம் கோயிலில் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலையில் பழைமையான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா ஒரு வாரம் நடைபெறும். தற்போது இந்தக் கோயிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பரமசிவன் மலைக் கோயிலில் பழைய கொடிமரத்துக்கு பதிலாக புதிதாக கொடிமரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, புதிய கொடிமரம் செய்யப்பட்டு போடி பெரியாண்டவா் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், கொடிமரம் பரமசிவன் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளைத் தலைவா் எஸ்.வடமலைராஜையபாண்டியன் தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது. உபயதாரரும், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவருமான கே.சேதுராம்-சரளா தம்பதியினா், கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் 33 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் டிராக்டா் மூலம் 3 கி.மீ. தொலைவு நகா்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடிவாரத்தை சென்றடைந்தது. பின்னா், மாலையில் கொடிமரம் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. வியாழக்கிழமை கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற உள்ளது.