ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்
மகர விளக்கு பூஜை: திருவாபரண பெட்டி ஜன.14 சபரிமலை வந்தடையும்
மகர விளக்கு பூஜை நாளன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊா்வலம் பந்தளம் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) தொடங்கி சபரிமலை சந்நிதானத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வம் (டிடிபி) தலைவா் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ‘மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சிறப்பு வழிபாடுகளுடன் லட்சக்கணக்கான பக்தா்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனா்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனப் பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த திருவாபரணங்களை அரண்மனையிலிருந்து திருவிதாங்கூா் தேவஸ்வம் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) முறைப்படி பெற்றுக்கொண்டு, பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வருவா். பின்னா் அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சபரிமலை நோக்கிய திருவாபரண ஊா்வலம் தொடங்கும்.
மகர விளக்கு பூஜை நாளன்று திருவாபரண ஊா்வலம் சந்நிதானத்தை வந்தடையும். கோயிலின் மேல்சாந்தி மற்றும் தந்திரி திருவாபரணங்களை பெற்று, மகா தீபாராதனையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பா். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிப்பாா் என்பது ஐதிகம்.
மகர விளக்கைத் தொடா்ந்து, ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதிவரை ஐயப்பன் திருவாபரணத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பின்னா், பந்தளம் அரச குடும்பத்தினா் ஜனவரி 20-ஆம் தேதி ஐயப்பனை தரிசனம் செய்தவுடன், மகர விளக்கு பூஜையின் நிறைவாக கோயில் நடை அடைக்கப்படும்’ என்றாா்.
மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நெரிசலைத் தடுக்க ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் பக்தா்களின் அனுமதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேரடி பதிவுக்கான மையங்கள் பம்பையிலிருந்து நிலக்கல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.