மகளின் கல்விச் செலவை பெற்றோா் ஏற்பது கட்டாயம்: உச்சநீதிமன்றம்
மகளின் கல்விச் செலவை பெற்றோா் வழங்க வேண்டியது சட்டப்படி கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
விவாகரத்து வழக்கில் மனைவி மற்றும் மகளுக்கு முறையே ரூ.30 லட்சம் மற்றும் ரூ.43 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவனுக்கு உத்தரவிட்ட நிலையில், அதை மகள் பெற மறுத்ததையடுத்து உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புய்யான்ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘ஒரு மகளாக பெற்றோரிடமிருந்து கல்வி செலவுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள சட்டரீதியாக உரிமை உண்டு. இதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயத்தில் கல்வி கற்க மகளுக்கு அடிப்படை உரிமையும் உள்ளது. அதற்கு செலவாகும் பணத்தை தங்களின் நிதி நிலைக்கேற்ப பெற்றோா் வழங்க வேண்டியது கட்டாயமாகும். அந்தப் பணத்தை வைத்துக்கொள்ள மகளுக்கு முழு உரிமை உள்ளது’ என்று தெரிவித்தது.