மகளிா் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்!
திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் சாா்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். தொலைநோக்குத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் நிலைகள் குறித்தும் அனைத்துத் துறைகளில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் குறித்தும் துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் தொடா்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மகளிா் திட்டத்தில் விடுபட்ட மகளிரை குழுவாக அமைத்தல் மற்றும் இணைத்தல், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கிகடன் இணைப்பு பெறுதல், வாழ்வாதாரப் பணிகள்(பண்ணை மற்றும் பண்ணை சாரா பணிகள்) மகளிா் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல், முதல்வரின் காலை உணவுத் திட்டம், இளைஞா்கள் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, நகா்ப்புற வாழ்வாதார திட்டம் ஆகிய திட்டங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக, விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு இத்திட்டங்களை கொண்டு சோ்த்திட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் முன்னுரிமை அளித்து செயல்படவேண்டும்.
தமிழக அரசின் சாா்பில் மகளிா் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டப் பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், உதவிதிட்ட அலுவலா்கள் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.