மகாராஷ்டிரா: காய்கறிகளை உலர வைத்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யும் பெண் - எப்படி?
வந்தனா பாட்டீல்
பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். சில பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு சொந்தமாக எதையாவது செய்கின்றனர். அதில் அதிகமானோர் சாதிக்கவும் செய்திருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்கறிகளை வாங்கி உலர்த்தி அதனை சந்தைப்படுத்தி அதில் சாதித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள மெமூராபாத் என்ற இடத்தை சேர்ந்தவர் வந்தனா பாட்டீல். 50 வயதாகும் வந்தனா ஆரம்பத்தில் மற்ற பெண்களைப் போன்று சுய உதவிக்குழுக்கள் மூலம் ஊறுகாய், அப்பளம், ஸ்நாக்ஸ், மசாலாப் பொருட்களைத் தயாரித்து விற்றார்.
ஆனால் அனைத்து சுய உதவிக்குழுக்களும் இதே வேலையைச் செய்ததால் வியாபாரம் பெரிய அளவில் நடக்கவில்லை. இதையடுத்து எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று வந்தனா முடிவு செய்தார்.

`விவசாயிகளின் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்'
இது குறித்து வந்தனா கூறுகையில்,
''2021ஆம் ஆண்டு கிரிஷி விக்யான் கேந்திரா அலுவலகத்திற்குச் சென்றபோது போது பழங்கள், காய்கறிகளை உலர வைத்து அதனைப் பவுடராகவோ அல்லது ஃபிளேக்குகள் (செதில்கள்) செய்து விற்பனை செய்ய முடியும் என்று தெரிந்துகொண்டேன்.
அதுவும் சோலார் உலர்த்தி மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை உலர்த்துவதன் மூலம் அவற்றின் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடிப்பதோடு, அதன் சத்துக்களும் குறைவதில்லை என்று தெரிந்து கொண்டேன்.
அதோடு இத்திட்டத்தின் மூலம் விலை கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளின் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்று தெரிந்துகொண்டேன்.
35% மானியம்
இதற்காக நான் பயிற்சி எடுத்துக்கொண்டு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் கடன் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் ரூ.10 லட்சம் தனிப்பட்ட கடன் வாங்கி இத்தொழிலை தொடங்கினேன்.
இதற்காக பிரதான் மந்திரி மைக்ரோ ஃபுட் பிராசஸிங் எண்டர்பிரைசஸ் திட்டத்தின் கீழ் 35% மானியம் கிடைத்தது.
2022ஆம் ஆண்டு இத்தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வந்தது. கிரீன் ஹவுஸ் போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக குழாய் போன்ற சோலார் உலர்த்தியை வாங்கினேன்.
அந்த உலர்த்தி மூலம் உள்ளே டிரேயில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படும்.

உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை வெளியேற்ற எக்ஸாஸ் பேன் பயன்படுத்துகிறோம். மின்சார உலர்த்தியை பயன்படுத்தினால் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிறம் மாறிவிடுகிறது.
இப்போது நாங்கள் முருங்கை இலை, கறிவேப்பிலை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம், எலுமிச்சை போன்றவற்றை உலர வைக்கிறோம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் முதலில் சுத்தமாக கழுவப்பட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதன் பிறகு டிரேயில் வைக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது.
எங்களது தயாரிப்புகள் பிரேக்பாஸ்ட் பூட்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, மாலத்தீவு போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
உலர்த்தப்பட்ட தக்காளி ரூ.700
ஒரு கிலோ உலர்த்தப்பட்ட தக்காளி மற்றும் பீட்ரூட் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் 100 கிராம் ரூ.100க்கு விற்பனை செய்கிறோம். ஒரு கிலோவாக விற்றால் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ உலர்ந்த வெங்காயம் ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஃப்ரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும்.
ஒரு கிலோ உலர்ந்த தக்காளியை எடுக்க வேண்டும் என்றால் 22 கிலோ ஃப்ரெஷ் தக்காளி தேவைப்படுகிறது. இதே போன்று 4 கிலோ கறிவேப்பிலை மற்றும் முருங்கை இலையில் இருந்து தலா ஒரு கிலோ உலர்ந்த இலை கிடைக்கிறது.

மாதத்திற்கு ரூ.3 லட்சத்திற்கு வியாபாரம்
10 கிலோ பீட்ரூட், 10 கிலோ இஞ்சி போன்றவற்றில் இருந்து 3 கிலோ உலர்ந்த பீட்ரூட் மற்றும் இஞ்சி கிடைக்கிறது. எனவேதான் உலர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கிறது.
10 கிலோ வெங்காயத்தில் இருந்து 2.5 கிலோ உலர்ந்த வெங்காயம் கிடைக்கிறது. இப்போது ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சத்திற்கு வியாபாரம் நடைபெறுகிறது.
கண்காட்சிகள் நடந்தால் சில நாட்களில் ரூ.8 முதல் 10 லட்சத்திற்கு வியாபாரம் நடந்துவிடும். எனது கடனை முழுமையாக அடைத்துவிட்டேன்.
இப்போது எங்களிடம் 15 பெண்கள் வேலை செய்கிறார்கள். விரைவில் இத்தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார்.