மகாராஷ்டிரா: மும்மொழிக் கொள்கையின் கீழ் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம்!
மத்திய அரசு புதிய கல்வித்திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிரா அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 5-வது வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆங்கிலம் மற்றும் மராத்தி மீடிய பள்ளிகளில் 1 முதல் 4வது வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்தியையும் சேர்த்து மாணவர்கள் மொழி பாடமாக படிக்கவேண்டியிருக்கும். ஏற்கெனவே 6 முதல் 10 வகுப்பு வரை மும்மொழிக் கொள்கைதான் அமலில் இருந்து வருகிறது.

எனவே அதில் எந்த வித மாற்றமும் கிடையாது என்று மாநில கல்விக்துறை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. பள்ளிப் படிப்பு பிரைமரி, செகண்டரி, ஹையர் செகண்டரி என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை அடிப்படை நிலை, ஆயத்த நிலை, நடுத்தர நிலை மற்றும் இரண்டாம் நிலை என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை நிலையில் கிண்டர் கார்டன் மற்றும் 1, 2வது வகுப்பு படிக்கும் 3 முதல் 8 வயது வரையுள்ள மாணவர்கள் படிப்பார்கள். ஆயத்த நிலையில் 3 முதல் 5வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள். நடுத்தர நிலையில் 6 முதல் 8 வது வகுப்பு வரையிலான மாணவர்களும், இரண்டாம் நிலையில் 9 முதல் 12வது வகுப்பு மாணவர்களும் இருப்பார்கள்.
ஒன்றாவது வகுப்பில் இருந்து மாநில பாடத்திட்டத்துடன் சேர்த்து NCERT பாடத்திட்டத்தை இணைத்து தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் நீட் போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்று மாநில கல்வித்துறை துணை இயக்குநர் துஷார் மகாஜன் தெரிவித்தார்.