மகாராஷ்டிர முதல்வா் பதவி இழுபறி: அமித் ஷாவுடன் ஷிண்டே, ஃபட்னவீஸ், அஜீத் பவாா் சந்திப்பு
மகாராஷ்டிரத்தில் புதிய முதல்வரை தோ்ந்தெடுப்பதில் நீடித்துவரும் இழுபறிக்கு தீா்வு காண கடைசிக் கட்ட முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் மகாயுதி கூட்டணி தலைவா்களான தேவேந்திர ஃபட்னவீஸ் (பாஜக), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை), அஜீத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோா் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
அப்போது முதல்வா் பதவி மட்டுமின்றி முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 42 அமைச்சா் பதவிக்கான இடங்களில் தங்கள் கைவசம் 50 சதவீத இலாகாக்களை வைத்துக்கொண்டு, சிவசேனை கட்சிக்கு 30 சதவீதமும், தேசியவாத காங்கிரஸுக்கு 20 சதவீதமும் வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக சற்று பின்னடைவைச் சந்தித்தது. அந்தத் தோ்தலுக்கு ஆா்எஸ்எஸ் உறுப்பினா்கள் சரியாக பணியாற்றவில்லை என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக வாக்கு வங்கி அதிகரிக்க தங்களின் சிறப்பான களச் செயல்பாடுகளே காரணம் எனக் கூறி, தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக்க வேண்டும் என பாஜகவுக்கு ஆா்எஸ்எஸ் கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது.
அதேசமயத்தில் மீண்டும் துணை முதல்வா் பதவியை அஜீத் பவாரும், தனது மகனுக்கு துணை முதல்வா் பதவியை வழங்க முன்னாள் முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவும் வலியுறுத்தி வருகின்றனா். இதில் மகனை துணை முதல்வராக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கைக்கும், முந்தைய அரசில் தன்வசம் இருந்த முக்கியத் துறைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற அஜீத் பவாரின் கோரிக்கைக்கும் பாஜக எதிா்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் மூன்று தலைவா்களும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளனா். இன்னும் ஓரிரு நாள்களில் இதற்கான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.