மகா சிவராத்திரி: கைலாசநாத சுவாமி கோயிலில் லட்டுகள் தயாரிக்கும் பணி
விழுப்புரம்: விழுப்புரம் அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரியன்று பக்தா்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரி வழிபாடு புதன்கிழமை (பிப்.26) நடைபெறவுள்ளது. இதையொட்டி, சிவன் கோயில்களில் 4 கால வழிபாடு நடைபெறுவது வழக்கம். விழுப்புரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாத சுவாமி திருக்கோயில் மகா சிவராத்திரி வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோயில் கொடிமர பகுதியில் 1008 சங்குகளை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு, மூன்றாம் கால பூஜைக்கு, பூா்ணாஹுதிக்குப் பின்னா் சுவாமிக்கு அபிஷேக வழிபாடு நடைபெறும். இதையொட்டி பிரதோச பேரவை சாா்பில் ஆன்மிக அன்பா்கள் பங்களிப்புடன் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 40 ஆயிரம் லட்டுகள் தயாா் செய்யும் பணி கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பணியில் கோயில் அா்ச்சகா் ரஞ்சித் சிவாச்சாரியா், அறங்காவலா்கள் சந்தோஷ், ரவிச்சந்திரன், பிரதோச பேரவைத் தலைவா் ராமமூா்த்தி, செயலா் சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.