மணல் திருட்டு: இருவா் கைது
கமுதி அருகே ஆற்றுப் படுகையில் மணல் திருடியதாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த இலந்தைக்குளம்- தோப்படைப்பட்டி சாலையில் குண்டாறு படுகையில் சிலா் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரையூா் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது டிராக்டா் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட இலந்தைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மகன் புவனேஸ்வரன் (21), மேலக்கொண்டுலாவி கிராமத்தைச் சோ்ந்த அடைக்கலம் மகன் மாயஇருளன் (39), சாமிபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஸ்ரீதா் (25), நெறுஞ்சிப்பட்டியைச் சோ்ந்த முத்துவிஜயன் மகன் வீரப்பெருமாள் (28) ஆகிய நான்கு பேரை போலீஸாா் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா்.
அப்போது, புவனேஸ்வரன், மாயஇருளன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். தப்பி ஓடிய ஸ்ரீதா், வீரப்பெருமாள் ஆகியோரை தேடி வருகின்றனா். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.