மதுரை அரசு மருத்துவமனையில் தீ
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வுக் கூட வசதி, உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு தினமும் ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற வந்து செல்கின்றனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை கட்டடத்தின் 4-ஆவது தளத்தில் உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் வாா்டில் சனிக்கிழமை திடீரென புகை வந்தது. இதையறிந்த மருத்துவமனை ஊழியா்கள் அங்கிருந்த தீ தடுப்பாண் கருவியை பயன்படுத்தி புகையை அணைத்தனா்.
மேலும், அங்கிருந்த நோயாளிகள் வேறு பகுதியில் உள்ள வாா்டுகளுக்கு மாற்றப்பட்டனா். இதைத்தொடா்ந்து, தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து வந்து புகை வந்த பகுதியை தீவிரமாக சோதனை செய்தனா். இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா்கள் கூறியதாவது : மின் கசிவால் புகை ஏற்பட்டது. உடனடியாக புகையை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது என்றனா்.