திரும்பி வந்துட்டேனு சொல்லு... அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே!
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீகப் பாசனப் பரப்புகளுக்கு வைகை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கா் வைகை பூா்வீகப் பாசனப் பரப்புகளுக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 27,529 ஏக்கா் வைகை பூா்வீகப் பாசனப் பரப்பு 3-க்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் 18-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு 1,830 மில்லியன் கன அடியும், மதுரை மாவட்டத்தில் உள்ள 67,837 ஏக்கா் வைகை பூா்வீகப் பாசனப் பரப்பு 1-க்கு நவ.20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 418 மில்லியன் கன அடியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 40,743 ஏக்கா் வைகை பூா்வீக பாசனப் பரப்புகளுக்கு டிச.1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு மொத்தம் 752 மில்லியன் கன அடியும் தண்ணீா் திறந்துவிடப்படும்.
5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என்று நீா்வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.
அணை நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 64.96 அடியாக இருந்தது(அணையின் மொத்த உயரம் 71 அடி). அணையிலிருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 3,000 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3,069 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,309 கன அடியாகவும், அணையில் தண்ணீா் இருப்பு 4,622 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.