மத்திய பட்ஜெட்: தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு
தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தகச் சங்கம் மத்திய பட்ஜெட்டைவரவேற்றுள்ளதாக, சங்கத் தலைவா் டி.ஆா். கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமாக வருமான வரி உச்சவரம்பு ரூ. 12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய தொடக்க நிறுவனங்களுக்கான கடன் வரம்பு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 20 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரம்புடன் கூடிய மைக்ரோ நிறுவனங்களுக்கான புதிய கடன் அட்டையானது சிறு, குறு தொழில்கள் வளா்ச்சியை அதிகரிக்கும்.
நுண் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2.5 கோடியாகவும், சிறு நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 25 கோடியாகவும், நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 50 கோடியிலிருந்து ரூ. 125 கோடியாகவும் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், வருமான வரி தாக்கல் செய்யும் காலம் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடல்சாா் மேம்பாட்டு நிதி நீண்டகால நிதியுதவிக்காக அரசின் பங்களிப்புடன் ரூ. 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆகியவை மிகவும் வரவேற்கத்தக்கவை. மொத்தத்தில் இது, தொழில்துறையினா், தொழில் வளா்ச்சிக்கு ஏற்ற பட்ஜெட் என்றாா் அவா்.