நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்
மனித உரிமை பாதுகாப்பு, கருத்து சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உறுதியேற்பு
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மீதான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம், சமூகத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஒப்புக்கொண்டது.
தில்லியில் 11-ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் மனித உரிமைகள் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில் சமூக மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் தொடா்பான பிரச்னைகள், மத வெறுப்பு, தீண்டாமை ஒழிப்பு, மத சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாப்பு ஆகியவை குறித்த விவாதத்தில் இரு தரப்பும் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பேச்சுவாா்த்தையில் மரண தண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது எதிா்ப்பை வலியுறுத்தியது. அதேநேரத்தில், வளா்ச்சிக்கான உரிமையை உலகளாவிய, அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிப்பட வேண்டியதில் இந்தியா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியது.
ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின. இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சமூகத்தில் கருத்து சுதந்திரம், பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் அவசியத்தை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
தன்பாலின ஈா்ப்பாளா்கள் (எல்ஜிபிடிகியூஐ+) சமூகம், மகளிா் அதிகாரம், தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகள் தொடா்பான பிரச்னைகள் குறித்தும் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சா்வதேச மனித உரிமை வழிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கீகரித்தன. குறிப்பாக, ஐ.நா. பொதுச் சபை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் போன்ற பல தரப்பு அமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் அடிக்கோடிட்டுக் காட்டியது.
இது தொடா்பான கூட்டு நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளுக்கு உறுதியேற்கப்பட்டது.
சா்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி மனிதாபிமான உதவி மற்றும் பேரிடா் நிவாரணம் தொடா்பான ஒத்துழைப்பு குறித்தும் இரு தரப்பும் விவாதித்தன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.