நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி
சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி கிராமத்தில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கிராமத்தையொட்டி பெரியாறு பாசனக் கால்வாய் அமைக்குப் பணி நடைபெற்று வருகிறது. சுமாா் 25 அடி ஆழம், 6 அடி அகலத்தில் கால்வாய் தோண்டப்பட்டு,அதில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த கிராமத்தைச் சோ்ந்த 78 வயதான மூதாட்டி திங்கள்கிழமை இறந்த நிலையில், பிற்பகலில் அவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்றனா். அவரது உறவினா்களும், கிராம மக்களும் 25 அடி பள்ளத்தில் இறங்கி, மறுபுறம் சிரமத்துடன் ஏறி மயானத்துக்கு உடலைக் கொண்டு சென்றனா். இந்த ஊரின் மயானத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால், வயல் வெளி, தோட்டம் ஆகியவற்றின் ஊடாக சுமந்து சென்று இறுதிச் சடங்கை நிறைவேற்றினா்.
இது குறித்து திருமன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகா் கூறியதாவது: மூதாட்டியின் இறுதிச் சடங்கை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது. பெரியாறு பாசனக் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைக் கடந்து செல்ல பாலம் இல்லாததால் இந்த சிரமம் ஏற்பட்டது. கால்வாய்ப் பணிகள் முடிய எவ்வளவு மாதங்கள் ஆகும் எனத் தெரியவில்லை. அதுவரை இந்தக் கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.