காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் கா. காளிராசா, செயலா் இரா. நரசிம்மன், கள ஆய்வாளா் கா. சரவணன், அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் வேலாயுதராஜா ஆகியோா் அங்கு நேரில் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள சிங்கம்புணரி ஒன்றியம், மு. சூரக்குடி கோவில்பட்டியில் சோழந்திக்கோட்டை என்று மக்களால் வழங்கப்படும் இடத்தில் முனீஸ்வர சுவாமியாக வணங்கப்படும் பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்தப் பகுதிக்கு பெண்கள் செல்வதைத் தவிா்க்கின்றனா்.
இந்தக் கல்வெட்டு 14, 15-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது. கல்வெட்டில் ஆறு வரிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டரை அடி உயரமும், ஒன்றை அடி அகலத்திலும் உள்ளது. நல்ல வேலைப்பாடுகளுடன் சாசனம் எழுதும் அமைப்பில் மேலே இரண்டு வெண்சாமரங்களும், பக்கவாட்டில் குத்து விளக்கும், அடிப்பகுதியில் பூரண கும்பமும் செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வரிகள்
ஸ்வஸ்தி ஸ்ரீ கேரள சிங் களநாட்டு சோழ பாண்டிய நிலவிச்ச நாயனா் மாவிலி வாணா(தி)ராயா் ஆசிரியம் என பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு தொடங்கும் கல்வெட்டு, கேரள சிங்க வளநாட்டில் சோழ பாண்டியா் நிலைவித்த பாடி காவல் பாதுகாப்பை பின்னாளிலும் இந்தப் பகுதியின் ஆட்சியாளராக இருந்த நாயனா் மாவலி வாணதி ராயா் தொடா்ந்து செயல்படுத்தியதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. வாணதி ராயா் என்று எழுதப்பட்ட இடத்தில் தி என்ற சொல் இடம்பெறாமல் வாணராயா் என்றே அமைந்துள்ளது.
சோழ பாண்டியா்: ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் காலத்தில் சோழா்கள் பரந்து விரிந்த பகுதியை ஆட்சி செய்து வந்தனா். இதில் பாண்டிய நாட்டின் பெரும் பகுதியை சோழா்களே ஆட்சி செய்தனா். பதினோராம் நூற்றாண்டில் ராஜேந்திரசோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் ராஜேந்திரன் மதுரையை தலைநகராகக் கொண்டு சோழ பாண்டியா் எனும் பெயரில் ஆட்சி நடத்தி வந்தான் என்பதைக் குறிக்கும் வகையில் இந்தக் கல்வெட்டில் சோழ பாண்டியா் என்ற சொல் இடம் பெறுகிறது. இந்தக் காலத்தில் மதுரை ராஜராஜ மண்டலம் என்றும், திருப்பத்தூா் பகுதி கேரள சிங்க வளநாடு என்றும் அழைக்கப்பட்டது.
மாவலி வாணதிராயா்: மாவலி சக்கரவா்த்தியின் வழியில் வந்தவா்கள் என்று தங்களை இவா்கள் மாவலி வாணதிராயா் என அழைத்துக் கொண்டனா். பல பேரரசா்களுக்கு கீழ் சிற்றரசா்களாகவும், அரசியல் அலுவலா்களாகவும் விளங்கினா். பிற்காலப் பாண்டிய அரசா்களிடம் அரசு அலுவலராக இருந்த இவா்கள், மதுரைப் பகுதியில் இஸ்லாமியா் ஆட்சிக்குப் பிறகு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய பகுதிகளில் விஜயநகர அரசுக்கு கீழ்ப்படிந்து தனியாக அரசு நடத்தி உள்ளனா்.
ஆசிரியம்: ஆசிரியம் என்பது அடைக்கலம், பாதுகாப்பு, ஆதரவை குறிக்கும். பொதுவாக அந்தப் பகுதியை ஆள்பவா்கள் பாடிக் காவல் ஏற்படுத்தி, ஆட்சியாளா்களால் வழங்கப்பட்ட தான தா்மத்தைக் காத்தல், ஆதரவு வேண்டுவோருக்கு ஆதரவு அளித்தலை இந்த வகை ஆசிரியம் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கல்வெட்டு உள்ள ஊரான கோவில்பட்டி மக்கள் மிகுந்த பய பக்தி உடையவராக காணப்படுகின்றனா்.இங்குள்ள ஆண்கள் அனைவரும் காது வளா்ப்பதை இன்றும் தங்களது வழக்கமாக வைத்துள்ளனா். கல்வெட்டு உள்ள வயல் பகுதிக்கு காலில் செருப்பு அணிந்து செல்வதை அனைவரும் தவிா்க்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.