செய்திகள் :

மயிலான்! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மயிலான் வாசல வாசல பாத்துட்டு இருந்தது, 

“இன்னும் போனவங்களை காணோம். எப்ப வருவாங்கன்னு தெரியல. காலையிலே கிளம்பி போனவங்க, தனியா போகலாம்ல்ல, அதை வுட்டுட்டு, கூடவே இந்த தங்கம்மாவையும் கூட்டிட்டு போய்ட்டாங்க”ன்னு மயிலான் மனசுக்குள்ள மறுகிட்டு இருந்தான். 

தங்கம்மா என்ன செஞ்சா பாவம்ன்னு கேட்கக் கூடாது தான். ஏன்னாக்க,  எப்ப பாரு, அவ இவன்ட்ட  சண்டை போட்டுட்டே இருப்பா. எந்நேரமும், எதுக்கெடுத்தாலும், எது கேட்டாலும் சண்டை தான். அதுலயும் வாய் வார்த்தை வாயில இருந்தா பரவால்ல.

அதை விட்டுட்டு மயிலானைக் கொத்தறதும், கால் நகத்தாலே பீர்றதும், அவன் திங்கும் பழத்தையும் கொட்டையையும்   புடுங்குறதும், ரெக்கையை தட்டி, ஒசக்க ஒசக்க பறந்து, எரவானத்த முட்டித் திரும்பறதும், ஒரு மாதிரி கோபமா கத்துறதும்னு, பாக்கவே காளியாத்தா மாதிரி மயிலானை மட்டுமில்லாம வீட்டாளுகளையும் கிடுகிடுக்க வெச்சிருவா. 

“அவளுக்கு யார்ட்ட கோபம் எதுக்கு கோபம்னு யாருக்குத் தான் புரியுது? எப்பவும்  என்னாண்ட சந்தோஷமாத் தானே இருந்தா. இப்போ என்ன வந்திச்சுன்னு  இப்படி மல்லு கட்டறான்னு” மயிலானுக்குப் புரியவேயில்ல.  

என்ன தான் மயிலானும் தங்கம்மாவும் கிளிகளாக இருந்தாலும், எந்நேரமும் சிடுசிடு சிடுன்னு, கூட இருக்குறவங்க மேல விழுந்து பிடுங்கிட்டேயிருந்தால், வீட்ல இருக்கிறவங்க நிம்மதியாவா இருக்க முடியுமா? இல்ல அந்த வீடுதான் நல்லா இருக்குமா? 

மயிலான் எவ்ளோ சொல்லி பாத்துட்டான். “தங்கம்மா, ரெண்டு பேரும் ஒண்ணா தானே இந்த வீட்டுக்குள்ள வந்தோம். நீ என்ன பண்ணினாலும் சகிச்சுக்கிட்டு போறேன்ல. நீ எதுக்கு கோபப்படுறன்னு” ஆதரவா அன்பா காதலா பாசமா பிரியமா சொல்லியும், இன்னும் என்னன்னவோ டக்கர் அடிச்சும் பாத்துட்டான். 

அப்பயும் அவ கோபம் குறைய மாட்டேங்குது. இங்க வந்த புதுசுல ரெண்டு பேரும் அம்புட்டு சந்தோஷமா அன்னியோனியமா இருந்தவங்க தான். கிக்கிக்கீன்னு சதா சிரிச்சிக்கிட்டு, ஒருத்தரை ஒருத்தர் விரட்டிப் பிடிச்சி விளையாடிக்கிட்டு, புதுசா கண்ணாலம் கட்டினவங்களாட்டி ஒருத்தரை விட்டு ஒருத்தர் இணை பிரியாம இருந்தவங்க தான்.  

“இந்த தங்கம்மா எதுக்குத் தான் இப்படி மயிலான்ட்ட சண்ட கட்டுறான்னு தெரியலையே. என்ன காரணம்னு?” அம்மா கேக்குறாங்க. 

 “அவளுக்கு இப்பல்லாம் ரொம்ப கோவம் ஜாஸ்தியா வருது.  சின்னதா ஒரே ஒரு குஞ்சு பொரிச்சிருந்தா கூட அவளுக்கு இவ்வளவு கோவம் வந்திருக்காது. அதை பாக்குறதுக்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்” -ன்னு அப்பா சொன்னாரு.

“யார் அவளை பெத்துக்க வேண்டாம்ன்னு  சொன்னது? இவ்ளோ பெரிய  வீட்ல இன்னும் ரெண்டு குஞ்சுக்கா இடமில்லாமல் போயிட போகுது? ன்னாங்க அம்மா. 

சாதாரண பச்சைக் கிளியான மயிலானுக்கு அப்படித் தோணலை. ஒஸ்தி ரக வெளிநாட்டுப் பல வர்ண கிளியான அவளைப் பாத்த முத பார்வையிலேயே அவள் அழகுக்கு கிறங்கித் தான் போனான் அவன். அழகுன்னா அழகு. சாதா அழகில்ல. பேரழகு. 

வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் அவளைப் பாத்து, “ஏன்னா அழகு” ன்னு வியக்குற அளவுக்கு தங்கம்மா அழகாயிருப்பா. பச்சையும் நீலமும் கலந்த வால் மாதிரி நீண்ட ரெக்கை பட்டுப்புடவை மாதிரி பளபளக்கும்.  மூக்குல சிகப்பு நிறத்துல ரெண்டு பொட்டு தங்க மூக்குத்தி மாதிரி ஜொலி ஜொலிக்கும்.

“தான் உலக மகா அழகின்னு திமிர்ல தான் தன்னைக் கண்டா பிடிக்கலை, இந்த ஆட்டம் ஆடறா” ன்னு தோணும் மயிலானுக்கு.

“நாம முன்னாடி வளத்தினோமே வேலன்னு ஒரு சேவல், அவன் பொஞ்சாதி வேலாயியும் இப்படித்தான் அவனை மிரட்டிட்டே இருந்தா. அவளை என்ன பண்ண நீனு?” ன்னு அப்பா கேட்டாரு.


“தனித்தனியா பிரிச்சு வச்சு பார்த்தேன் அப்பயும் வேலனை கொத்தப் போவா வேலாயி. ரெண்டு பேத்தையும் கூண்டுலருந்து திறந்து வுட்டேன். ரெண்டு பேரும் ஒத்துமையா சந்தோஷமா  திரிவாங்க. குப்பை கூளங்களல்லாம் கீறி கிளறி இருக்கிற புழு பூச்சி எல்லாம் புடிங்கி தின்னு கிட்டு” ன்னு பழைய நினைப்புல சிரிச்சவங்க “ரெண்டு பேரும் சிரிப்பதும், இறக்கையை படக் படக்குன்னு அடிச்சுகிட்டு எம்பறதும், பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியா இருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு பாசமா இருந்தாங்க”ன்னு அம்மா சொன்னாங்க.

“வேலான்னு ஒரு குரல் குடுத்தா போதும். எங்கே இருந்தாலும் உடனே வந்து நிப்பான்.  கூடவே வேலாயியும் அவனை இடிச்சுக் கிட்டு ஓடி வந்து நிப்பா தெரியுமா”ன்னு அப்பா சிரிச்சாங்க. 

என்னடா அவங்கள போய் அம்மா அப்பான்னு சொல்றானே இந்த மயிலான்னு நினைக்கிறீங்களா? என்ன பண்றது? நாயைத் தானே நன்றியோட இருக்கும்னு பெத்தப் பிள்ளையைப் போல வளப்பாங்க மனுஷங்க. ஆனாக்க சில வூடுகள்ல ஜல்லிக்கட்டு காளைங்களை புள்ளை மாதிரி வளக்கறவுங்க உண்டு. ஆனா மயிலான் மாதிரி கிளியையும் தங்கம்மா மாதிரி கிளியம்மாளையும் கூட சொந்த பிள்ளைகளைப் போல வளக்குற பெற்றோர்கள காண்பது அரிதிலும் அரிது. 

அம்மாம் பெரிய நடுவூட்டுல, ரெண்டு பேரும், ஆடுறதும், பாடறதும், டிவி பெட்டியில், பாட்டு காட்சி வந்தா கூடவே மயிலான் விசில் அடிப்பதும், சண்டை காட்சி வந்தா, ரெண்டு பேரும் கீச் கீச்சுன்னு கத்தறதும், ஒரே அக்கப்போர் தான்.

அம்மா யாரோடும் போனில் பேசக் கூடாது. அவுங்க ரெண்து பேத்துக்கும் பிடிக்காது. இது எப்படி இருக்கு! ரெண்டு பேரும் சத்தம் போடுவங்க. அதனால யார்ட்டையும் ரெண்டு வார்த்தை போன்ல முழுசா பேச முடியறதில்ல. சொந்தகாரவுங்களும் போனை எடுத்ததுமே, “என்னம்மா உன் பிள்ளைங்க எப்படி இருக்காங்க?” ன்னு கேக்கற அளவுக்கு ரெண்டு பேரும் குடும்ப உறுப்பினர்களாகவே ஆகிட்டாங்க.

ரேசன் கார்டுல பேர் குடுத்து, ஆதாரையும் எடுத்துடும்மான்னு அவுங்க வீட்டு தம்பு கேலி பண்ணுவான். ஏழு மணியாச்சுன்னா நடு வீட்ல, விளக்கை அணைக்க சொல்லி கூப்பாடு போடுவாங்க. என்னடா உங்களோடன்னு அலுத்துக் கிட்டாலும், சத்தம் தாங்காம விளக்கை அணைச்சிட்டு இருட்டுலய நடப்பாங்க அப்பாவும் அம்மாவும்.

ஒரு வழியா ஒரு கூண்டை செஞ்சி ரெண்டு பேத்தையும் அதுல போட்டு சுத்தி மறைப்பா பேப்பரை ஒட்டி இருட்டாக்கிட்டாங்க. மனுஷங்க மாதிரி இவுங்களுக்கும் இருட்டும் மறைப்பும் தேவையாயிருக்குன்னு அம்மா சிரிச்சாங்க. கிளியோ மனுஷனோ, யாராயிருந்தா என்ன? உலகத்துல இருக்குற எல்லா ஜீவராசிகளுக்கும் காதல் இயற்கையானது தானே!

அவங்க வீட்ல மக வயித்துப் பேத்தி பொறந்துச்சு.  அவள நல்லா குளிக்க ஊத்தி, பவுடர் போட்டு, நடுவூட்ல சாமிப் படத்துக்குக் கீழே கிடத்தி, “ஓ கொச்சு, நன்னாயிட்டு குளிச்சி பொட்டிட்டு மையிட்டு கிடக்குன்ன கிடப்பைப் பாரு” ன்னு அம்மா கொஞ்சினா கூடவே இவுங்க ரெண்டு பேரும் அதை கீக்கீக்கீன்னு வழி மொழிவாங்க. 


“குட்டி மயிலு, உன்னை அண்ணனும் அண்ணியும் எப்படி கொஞ்சுறாங்கன்னு பாரு”ன்னு அப்பா பேத்திட்ட சொல்றதை கேக்கற வீட்டு விருந்தாளிகளுக்கு விசித்திரமாயிருக்கும். சிலர் கண்ணுக்கு மறைவா, உக்கும்..அண்ணனாம் அண்ணியாம்னு தவடையை தோள்ல இடிச்சிக்கிறதும் உண்டு.  


மயிலான் பேத்திக்கு டான்ஸ் ஆடிக் காமிப்பான், பாட்டு பாடுவான். விசில் அடிப்பான். இவன் பண்ற சேட்டை எல்லாம் பாத்துட்டு தங்கம்மா சண்டைய மறந்துட்டு ஒரே சிரிப்பா சிரிக்க, அவ சிரிக்கிற சிரிப்புல, குழந்தை திரும்பி பாக்க ஆஹா தங்கம்மா குஷியாயிட்டான்னு புரிஞ்சுகிட்டு, இவன் பாப்பாவை வுட்டுட்டு தங்கம்மாட்ட பல்டி அடிக்கிறது பாட்டுப் பாடறதுன்னு ரொம்பவே நாடகம் போட, அதை தங்கம்மா பாத்து இன்னும் சிரிக்க, தங்கம்மாவோட சிரிப்பு சத்தம் கேட்டு பாப்பா பதிலுக்கு சிரிக்க, மூணு பேரும் ஒரே சிரிப்பு, அட்டகாசம், பார்க்கிறவங்களுக்கு, கிளிங்க எது மனுஷங்க எதுன்னு வித்தியாசம் இல்லாத தெய்வ சன்னிதானம்  மாதிரி இருக்கும். மூணுமே ஒரே ஜீவராசியாத்தானிருக்கும்.

அன்பு இருக்குற இடத்துல மகிழ்ச்சி இருக்கும். மகிழ்ச்சி இருக்குற இடத்துல சிரிப்பு இருக்கும். சிரிப்பு இருக்குற இடத்துல தெய்வம் இருக்கும்னு அந்த காலத்துல பெரியவங்க சும்மாவா சொன்னாங்க! 

குழந்தைகளும் பறவையைப் போல தானே!  சின்னக் குழந்தை தெய்வத்துக்கு சமம். இந்த உலகமோ இயற்கையோ தெய்வம் போல தானே மாசு மரணம் இல்லாதது. அதனால அவங்களுக்கு அன்பை 

மட்டும் வெளிப்படுத்த தெரியும்ங்குறது எவ்வளவு உண்மை. மூணு பேரும் சேர்ந்து அவ்வளவு சந்தோஷமா இருந்தது அந்த வீடு

இப்போல்லாம் தங்கம்மா சண்டை போட்டா மயிலானும் கூட கூட சண்டை போட ஆரம்பிச்சிட்டான். பின்னே என்ன! அவனும் எத்தனை நாள் தான் பொறுத்துப் போவான். அவனுக்கு தான் ஒரு ஆம்பிள என்ற நெனப்பு திடீர்னு வந்துருச்சு. ஆமா ஊர்ல உலகத்துல இல்லாத பேரழகின்னு அவ மேல ரொம்பவே சலிப்பாயிட்டான். அதுவும் சரி தான். எதுக்கும் யாருக்கும் உதவாத அழகு இருந்தென்ன பிரயோசனம்? ஒரு நாள் மயிலான் தங்கம்மா ரெண்டு பேர் சண்டையும் ரொம்பவே உக்கிரமாயிருச்சு. அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானம் செஞ்சிப் பாத்தாங்க. திட்டினாங்க. கண்டிச்சிப் பாத்தாங்க. ஊஹூம். அப்பயும் சரியாவலை. ரெண்டு நாளா கர் புர்ன்னு தான் போயிட்டு இருந்தது.


வேற வழி இல்லாம, “வேலனையும் வேலாயியையும் கூட்டை திறந்து விட்டதைப் போல இவங்களையும் கூண்டை திறந்து விட்டா, போய் கொஞ்சம் வெளியில் காத்தாட நடந்தாங்கன்னா சந்தோஷமா இருப்பாங்க” ன்னு அம்மா சொல்ல, 

“சரி அப்படித் தான் செஞ்சு பார்ப்போம்” ன்னு சொல்லி அப்பா கூண்டைத் திறந்து விட்டாங்க. 


கூண்டை திறந்து விட்டதுமே தங்கம்மா அதுக்குன்னே காத்துட்டு இருந்ததைப் போல உடனே சர்ருன்னு வெளியே போய்ட்டா. அதுக்கு நேர்மாறா, மயிலானை “வெளியே போடா” ன்னு புடிச்சி தள்ளி விட வேண்டியதா போச்சு. 

“குடுக்கறதைத் தின்னுப்புட்டு, கூண்டுக்குள்ளேயே குந்தியிருந்து சோம்பேறியா போயிட்டான் மயிலுன்னு” அப்பா சொல்ல, 


“கிளியானாலும் ஆம்பளையானாலும் வூட்டுக்குள்ளேயே குந்தியிருந்தா எந்த பொம்பிளைக்குத் தான் பிடிக்கும்” னு அம்மா கேட்டாங்க. நெசம் தானே!     


மயிலான் வீட்ட சுத்தி, தத்தி தத்தி நடந்து, கொத்தி கொத்தி தின்னு, மண்ணை கிளறி, ஏதோ பண்ணிட்டு இருந்தான்.  “சரி ரெண்டு பேரும் இங்க தானே இருக்காங்கன்னு” அப்பா வெளியே போயிருக்க, அம்மா கொஞ்சம் கண்ணை அசந்த மதிய நேரத்துல,. பாதுகாப்பா இருக்குற வூட்டை வுட்டுட்டு, வுட்டா போதும்னு சில பொண்ணுங்க மாயையை நம்பி வீணாய் போவதைப் போல தங்கம்மா பக்கத்து வீட்டுக்கு பறந்துட்டா.  வெளி உலகத்துல, வட்டமிடும் வல்லூறுகளும் கொத்திப் பிடுங்கித் தின்னும் பருந்துகளும் இருக்குங்குறத, பொம்பள புள்ளைங்க மறந்து போயிடுற மாதிரி இவளுக்கும் பக்கத்து வீட்ல நாய் இருந்தது தெரியாம போயிருச்சு. 

இவளைக் கண்டதும் அவுங்க வூட்டு நாய் லொள்ளு லொள்ளுன்னு பிடிச்சு தின்னறதுக்கு விரட்டிட்டு இருந்துச்சு. தங்கம்மா ரொம்ப பயந்து போயிட்டா. வீட்டை விட்டு வந்தது தப்புன்னு புரிஞ்சுப் போச்சு. வீட்டுக்கு வந்துறலாம்ன்னு காம்பவுண்ட் சுவத்து மேல ஏறுவதற்கு முயல, அவளோட ரெக்கையோட முனையை பிடித்து நாய் இழுக்க, தங்கம்மாளோ கீக்கீக்கீன்னு பெருங்குரலெடுத்து படபடத்து கதற, நல்ல வேளை அந்த வீட்டு அம்மா பாத்துட்டு நாய விரட்டி வுட்டு கிளியைத் தூக்கி காம்பௌண்ட் சுவத்துக்கு மேல உட்டுட்டாங்க. 


“யாரு செஞ்ச புண்ணியமோ நல்லவேளை பொழச்ச தாயே”ன்னு ரெண்டு பேரையும் மறுபடியும் பிடிச்சு கூண்டுக்குள்ள வச்சுட்டாங்க அம்மா.

அவுங்க வூட்டு தம்புவுக்கு கண்ணாலத்துக்கு சேலம் எடப்பாடிப் பக்கம் பொண்ணு பாத்துட்டு வந்தாங்க பெரியவங்க. ஏக தேசம் இந்த இடம் தெகஞ்சிடும்னு பேசிக்கிட்டாங்க. ஆனா என்ன காரணமோ கல்யாணம் குதுறலை. 

“இந்த வூட்ல கிளிங்களுக்குக் கூட ஒரு குஞ்சு வைக்கலை. இதுல எங்கேருந்து என் தம்பிக்கு பொண்ணு அமையறது?” ன்னு தம்புவோட அக்கா சொல்லி வருத்தப்பட்டிச்சி.

ஒருநாள் காலையில ரொம்பவே உர்ருன்னு இருந்தா தங்கம்மா. மயிலான் என்ன கெஞ்சியும் அசையாம உக்காந்திருந்தா. ரெண்டு பேருக்கும் என்ன வாக்குவாதமோ மனஸ்தாபமோ! சண்டை கூட போடாம அமைதியா இருக்காளேன்னு ஆச்சரியமா இருந்தது. திடீர்னு கீச்கீச்ன்னு கத்திட்டு இருந்தா. மயிலானும் பதிலுக்கு சண்டை போடவே தங்கம்மா விஷ்க்ன்னு பறந்து போய் பின்னாலேயிருக்கிற தண்ணித் தொட்டியில பப்பரக்கான்னு விழுந்துட்டா. அவளைக் கண்ணே மணியேன்னு கொஞ்சி கெஞ்சி சரி பண்ண தடுமாறிப் போய்ட்டாங்க பெரியவுங்க. 


“ஊஹூம். இவளை வெச்சிக்கிட்டு சரிபடாது. நாம வீட்ல இல்லாதப்போ இதை மாதிரி ஏடாகூடமா ஏதாவது செஞ்சிக்கிட்டா என்ன பண்றது” ன்னு கவலைப்பட்டாங்க. வேற வழி இல்லாம சந்தையில அமீது பாய்ட்ட வுட்டுட்டு இன்னொரு கிளிய கூட்டிட்டு வரப் போயிருக்காங்க. 


இந்த வூட்டு தம்பு சொல்லிச்சு. “யம்மா அமீது பாய், நாட்டு வைத்தியர்ட்ட தங்கம்மாவைக் குடுத்துடப் போறாரு. மூட்டுவலிக்கு கிளி ரத்தம் நல்லா கேக்கும்னு அவரு அறுத்துட கிறுத்துடப் போறாரு” ன்னு வெசனப்பட்டது பாவம். 


கிளி ரத்தம் மூட்டுவலிக்கு கேக்குமா என்ன? நெசமாவா? 


தங்கம்மாவைப் போல ஒசத்தியான வெளிநாட்டு அழகான கிளியா இல்லாம மயிலான் தனியா இருப்பானே, அவனுக்கு ஒரு துணை வேணுமே பாவம்னு சாதாரண கிளியம்மாவ கூட்டிட்டு வந்தாங்க பெரியவுங்க. ஆனாலும் மயிலான் அந்த புதுக்கிளிய ஏறெடுத்தும் பாக்கலை. 


“மயிலான் இதோ பாரு. இதுவும் தங்கம்மா தாண்டா” ன்னு புதுக்கிளிக்கு தங்கம்மான்னே பேரு வெச்சிட்டாங்க. 


அந்த கிளிக்கு முன்னே இருந்த வீட்ல என்ன பேரோ? இவுங்க வெச்ச புதுப் பேரான தங்கம்மாவுக்கு அது திரும்பிப் பாக்கறதில்ல. ஒன்னு ஒசத்தி மத்ததொன்னு மட்டம்னு ரெண்டும் ரெண்டாப்பை, ரெண்டாப்பையும் கழண்டாப்பைன்னு ஏட்டிக்கிப் போட்டியா இல்லாம ரெண்டும் ஒன்னு போல இருந்தா சண்டை வராதுன்னு யாரோ சொன்னாங்களாம் அவுங்களுக்கு. 

புதுசா வந்தவ சாப்பிடுறது இல்ல பேசுறது இல்ல. புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த புது பொண்ணு மாதிரி என்னவோ கோவிச்சுக்கிட்டு ஒக்காந்துட்டு இருந்தா. 

“காலைல இருந்து தங்கம்மா ஒன்னுமே சாப்பிடலடா மயிலான், என்னன்னு கொஞ்சம் கேக்க 

கூடாதாடா”ன்னு அம்மா சொல்ல, தங்கம்மான்னு பேரைக் கேட்டதும் மனசு இளகிப் போச்சு மயிலானுக்கு.  உடனே பழைய டெக்னிக் படி அவளுக்கு டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி, விசில் அடிச்சு, பல்டி அடிச்சிக் காமிக்கிறதுன்னு அவ கவனத்தைக் கவர, என்னன்னவோ டக்கரடிச்சிப் பார்த்தான் மயிலான். அப்பயும் அவ அசையவேயில்ல. இப்படியே போயிட்டு இருந்தது இவங்களுடைய காலம். ஆண்டாண்டு காலமா ஆணுக்கும்  பெண்ணுக்குமிடையே இருக்கும் ரசாயனம் மயிலான் தங்கம்மா மத்தியில வராமலா போய்டும்? அப்புறம் என்ன? இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே சிரிப்பு தான். கூத்து தான். கும்மாளம் தான். நாலு முட்டை வச்சதுல ரெண்டு குஞ்சு பொரிச்சு இன்னும் ரெண்டு முட்டை குஞ்சு வெளியே வர காத்துக் கிட்டு இருக்கு. 


அவுங்க வூட்டுத் தம்புக்கு கல்யாணம். இந்த தடவை பொண்ணு தேனி பக்கம். வீடே அமர்களப்பட்டது. “இவுங்க வூட்ல மயிலானுக்கும் தங்கம்மாவுக்கும் குஞ்சு பிறந்த ராசி, நாலு வருஷமா பொண்ணுத் தேடிட்டுருந்த அந்த வீட்டு தம்புக்கு கண்ணாலம் ஆச்சு” ன்னு அவுங்க மட்டுமல்லாம சொந்த பந்தம் முச்சூடும் சொல்லி பூரிச்சிப் போனாங்க.  


புது பெஞ்ஜாதியோட வீட்டுப்படியில காலெடுத்து வைக்கும் போது ஆரத்தி சுத்தறதுக்கு முந்தி மயிலான் தங்கம்மாவோட சிரிப்பு சத்தம் பொண்ணை வுட்டுட்டு போக வந்திருந்த சொந்தகாரவுங்களுக்கும், புது சம்பந்திகளுக்கும் சிரிப்பைத் தர, அந்த இடமே, ஒரு பைசா செலவில்லாமல்  ரொம்பவே குதூகுலமாயிருந்தது. 

ஜீவ ராசிகளே இந்த வூட்ல சந்தோஷமாயிருக்கும் போது எம்மவளும் இங்கன ஒரு குறையுமில்லாம இருப்பான்னு புள்ளையை விட்டுட்டு நிம்மதியா திரும்பிப் போனாங்க பொண்ணு வூட்டுக்காரவுங்க. கல்யாணப் பொண்ணும் சந்தோஷமா புருஷன் கையைப் பிடிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே வூட்டுள்ளாற வந்தது. 

ஆங். அது சரி. தங்கம்மா என்ன ஆனா தெரியுமா? 


“ஒரு குளு குஞ்சு கூட வைக்காத நம்மை வெச்சிக்கிட்டு நம்ம அம்மா அப்பா என்ன செய்வாங்க? நம்மளாலே தான் தம்புவுக்கு கண்ணாலம் ஆவலை. அதுக்கும் மேலா நம்மளை ஆசையா பாசமா எந்நேரமும் சிரிக்க வெச்சிக்கிட்டு இருந்த மயிலான் என்ன பண்ணுவான்.  என்னாலே உனக்கு எந்த சந்தோசமுமில்ல, நான் எங்கன்னா போயிடறேன்னு சொன்னா, என் மேல உசுர வெச்சிருக்குற மயிலான் ஒத்துக்குவானா! வீண் சண்டை வலிச்சி  நானு வீட்டை விட்டுட்டு போகவும் தானே, புதுசா ஒரு கிளியம்மா வந்தா. நாலு குஞ்சு பொரிச்சா. ரெண்டு பேரும் சந்தோஷமாயிருக்கக் கண்டி தானே வீட்டாளுகளும் சந்தோஷமாயிருக்காங்க. அவுங்க எல்லாரும் எப்பவும் நல்லாயிருக்கனும். அதிலும் குறிப்பா மயிலான் சந்தோசமா இருக்கணும்” னு நெனச்சிட்டு இருக்கா தங்கம்மா.  

மனுஷனுக்கு மட்டுமா காதல்? உலகின் எல்லா ஜீவராசிகளுக்கும் காதல் பொதுவானது தானே! உலகில் வாழும் எல்லா உயிரினங்களிலும் மனுஷன் உட்பட உருவத்தில் பேதமிருந்தாலும் உணர்ச்சியில் பேதமில்லையே. படைச்சனிடத்திலும் எந்த பேதமுமில்லையே!    


நன்றி.

G. சியாமளா கோபு 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நட்பின் ரகசியம்: ஒரு சிறுவனும் வெள்ளை நாயும் #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்பின் விதை! - அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவன் ஏழை இல்லை! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பிளாட்பாரம்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நினைவே.. உன் பெயர் சுமையா! | சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க