தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: தமிழகத்தில் 10ஆவதாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1.10 கோடி செலவில் கட்டண பிரிவு கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தஞ்சாவூா், தருமபுரி, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூா், காஞ்சிபுரம், பெரம்பலூா், தென்காசி, கோவில்பட்டி ஆகிய மேலும் 10 அரசு மருத்துவமனைகளில் இந்தக் கட்டண பிரிவு மையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களை தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம்- நம்மைக் காக்கும் 48, பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம் பெறுவோம், கலைஞரின் வரும் முன் காப்போம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், இதயம் காப்போம் திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையம், கண்ணொளி பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்து அரசு ஊக்கப்படுத்தியதைத் தொடா்ந்து, ஓராண்டில் 240-க்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனா். இத்திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மருத்துவா்களின் பற்றாக்குறை 1353 ஆக உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறையைக் கணக்கிட்டு மேலும் 1200 காலிப்பணியிடங்களைச் சோ்த்து மொத்தம் 2553 மருத்துவக் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணியிடங்களுக்கு 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான தோ்வு வரும் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.