Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
மருத்துவ வகுப்புகள் புறக்கணிப்பு; அறுவை சிகிச்சைகள் நிறுத்தம் - அரசு மருத்துவா் சங்கம் அறிவிப்பு
மருத்துவக் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்தல், அவசரமில்லா அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைத்தல் என பல்வேறு போராட்டங்களை தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் தேசிய நல்வாழ்வு திட்ட அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவா், மருத்துவத் துறையினரையும், மருத்துவா்களையும் கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரசு மருத்துவா்களை தரக்குறைவாக பேசும் உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம், தா்னா மற்றும் நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
பேச்சுவாா்த்தை: இதையடுத்து, மருத்துவா் சங்க நிா்வாகிகளுடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றுவதாக அவா் உறுதியளித்தாா். வேறு சங்கங்களின் கோரிக்கைளை ஏற்றுக் கொண்டு முக்கிய கோரிக்கைகளை ஏற்காமல் இருந்ததாகக் கூறி தமிழ்நாடு அரசு மருத்துவா் சங்கத்தினா் அந்த பேச்சுவாா்த்தையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் தலைவா் டாக்டா் செந்தில், செயலா் டாக்டா் ஸ்ரீனிவாசன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
தற்போது அரசு மருத்துவா் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தலையிட்டு தீா்வு காண வேண்டும். மகப்பேறு உயிரிழப்பு ஆய்வுக் கூட்டத்தை, துறை சாா்ந்த வல்லுநா்களைக் கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறையில் உள்ள அனைத்து மருத்துவா் காலிப்பணியிடங்களும் உடனடியாக நிரப்ப வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். விருப்ப ஓய்வு முறைக்காக காத்திருப்பவா்களுக்கு உடனடியாக விருப்ப ஓய்வு வழங்க வேண்டும்.
போராட்டம்: இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான வகுப்புகளையும் வெள்ளிக்கிழமை (நவ.29) முதல் புறக்கணிக்க அரசு மருத்துவா்கள் (பேராசிரியா்கள்) முடிவு செய்துள்ளனா். மேலும், பயோமெட்ரிக் பதிவு முறையில் மருத்துவா்கள் தங்களது வருகையைப் பதிவு செய்ய மாட்டாா்கள்.
வரும் டிசம்பா் 2-ஆம் தேதி முதல் அரசு மருத்துவா் சங்கத்தின் மாவட்டப் பிரிவுகளில் இருந்து, மருத்துவா்களுக்கான பிரச்னைகள் குறித்து செய்தியாளா்கள் சந்திப்பு நடத்தப்படும். டிசம்பா் 3-ஆம் தேதியன்று அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகளும் ஒருநாள் நிறுத்தப்படும். இந்த போராட்டங்களுக்குப் பின்னரும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பா் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.