மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை!
மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உடலுக்கு 2-ஆவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் தனி இடம்பிடித்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகர் ஸுபீன் கர்க். இந்த நிலையில், கடந்த வாரம் சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ஸுபீன் கர்க்(52), அங்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள இறப்புச் சான்றிதழில் ஸுபீன் கர்க் மறைவுக்கு மேற்கண்ட காரணமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஸுபீன் கர்க்கின் உடலுக்கு குவாஹாட்டி மருத்துவ கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(செப். 23) காலை 7.30 மணியளவில் குவாஹாட்டி எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், ஸுபீன் கர்க்கின் இறப்புச் சான்றிதழ் வேறு, பிரேதப் பரிசோதனை அறிக்கை வேறு, ஆகவே அங்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை விவரங்களை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் வினவியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, அன்னாரது உடலுக்கு இறுதிச்சடங்கும் குவாஹாட்டி அருகே கமர்குச்சி என்சி பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நாளை மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.