சாதிவாரி கணக்கெடுப்பில் ஹிந்துக்களை பிரிக்கிறது காங்கிரஸ்: பாஜக
கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமானது அல்ல என பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களுடன் அசோகா பேசியதாவது,
''கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மதமாற்றத்தை ஊக்குவிக்கிறது. சாதிகளை பிரித்து கணக்கெடுப்பதே சாதிவாரி கணக்கெடுப்பு. ஆனால், சித்தராமையா இதனை மதமாற்றம் செய்வதற்கான வாய்ப்பாக இதனை உருவாக்கியுள்ளார்.
வொக்காலிகா, தலித் மற்றும் விஸ்வகர்மா உள்ளிட்ட 52 சமூகத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றப்படுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை அவர்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரித்தோ அல்லது குறைத்தோ காட்டுகின்றனர்.
கிறிஸ்தவம், இஸ்லாமியத்தில் பல சமூகத்தினர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களை வெளிப்படுத்தவில்லை. ஹிந்து மதத்தில் அடக்குமுறை உள்ளதாக சித்தராமையா கூறுகிறார். ஆனால், பெண்கள் மசூதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும். இதுபோன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகளும் அடக்குமுறைக்குள் வருவதில்லையா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''கர்நாடகத்தில் அதிகபட்சமாக லிங்காயத்துகளும் இதற்கு அடுத்தபடியாக வொக்காலிகா சமூகத்தினரும் உள்ளனர். இந்த விகிதத்தை சித்தராமையா மாற்றப்பார்க்கிறார். வொக்காலிகா சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி பிரிக்கப் பார்க்கிறார். புதிய சாதியை உருவாக்குகிறார்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முதல்வர் அல்ல!