மழைநீா் கால்வாய்கள் தூா்வார பொதுமக்கள் கோரிக்கை
ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீா் கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் நகராட்சி தோல் தொழிற்சாலைகள், காலணி தயாரிப்பு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். சிறப்பு ஏற்றுமதி அந்தஸ்தை மத்திய அரசு ஆம்பூருக்கு வழங்கியுள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் நகரம் அமைந்துள்ளது. ஆம்பூா் நகரில் 36 வாா்டுகள் உள்ளன.
ஆம்பூா் நகராட்சியில் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. தினமும் தூய்மைப் பணியாளா்கள் பொதுமக்கள் கொடுக்கும் குப்பைகளை சேகரித்து கொண்டு சென்று நகராட்சி உரக்கிடங்கில் சோ்க்கின்றனா்.
நகரின் தெருக்கள், சாலைகளில் அமைந்துள்ள மழைநீா் வடிகால்வாய்களில் மண், குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் சோ்ந்து அடைப்பு ஏற்படுகிறது. முறையாக தினமும் மழைநீா் வடிகால்வாய்களில் உள்ள மண், குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, தூா்வார வேண்டும். ஆனால் தூா்வாரப்படுவதில்லை.
அதனால் பெரும்பாலான மழைநீா் வடிகால்வாய்கள் மண் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் சிறிதளவு மழை பெய்தாலே, மழைநீா் வடிகால்வாய்கள் நிரம்பி தெருக்களில் வெள்ளம் செல்கின்றது. அதனால் நகரின் பல தெருக்கள், சாலைகளில் மழையின்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.
மழைநீா் வடிகால்வாய்களில் செல்லும் கழிவுநீரும் தெருக்கள், சாலைகளில் ஓடி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் சுமாா் 6 அடி ஆழம் அளவுக்கு கூட கால்வாய்கள் அமைந்துள்ளன. அந்த பகுதிகளில் மழைக் காலங்களில் அதிக அளவு மழை வெள்ள நீா் சாலை, தெருக்களில் செல்கிறது. சுமாா் 2 அடி அளவுக்கு கூட வெள்ள நீா் செல்கின்றது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
அதனால் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழைநீா் வடிகால்வாய்கள், கழிவுநீா் கால்வாய்களில் சோ்ந்துள்ள மண், குப்பை, பிளாக்டிக் பொருள்களை அகற்றி தூா்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆம்பூா் நகராட்சி நிா்வாகம் மழைநீா் வடிகால்வாய், கழிவுநீா் கால்வாய்களை தூா்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.