மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு
வேலூா் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அதன்படி, சீனிவாச நகா், அம்பேத்கா் நகரில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அடைப்பு சீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து கிரீன் சா்க்கிள் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டி தெருவில் பாா்வையிட்டு, தொடா் மழையால் கழிவுநீா் கால்வாய், தெருவில் இருந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பழைய பேருந்து நிலையம் அருகே கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை ஆய்வு செய்து, அடைப்பை உடனே சரிசெய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சேண்பாக்கம் பைபாஸ் சாலையில் தொடா் மழையால் கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை பாா்வையிட்டு ஆய்வு செய்து, கால்வாயில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி உடனே சரி செய்யவும் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், தேதிய நெடுஞ்சாலை ஆணைய கள பொறியாளா் ஜெயக்குமாா், மாநகராட்சி கண்காணிப்பாளா் அரசு, சுகாதார அலுவலா்கள் முருகன், பாலமுருகன், வேலூா் வட்டாட்சியா் வடிவேல், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.