Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது
மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் பயிலாமல் மருத்துவம் பாா்க்கும் போலி மருத்துவா்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில், வேலூா் மாவட்ட போலீஸாா், மாவட்ட மருத்துவப் பணிகள் துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை தீவிர ஆய்வு மேற்கொண்டதில், 8 போ் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. அதன்படி, அணைக்கட்டு வட்டம், குருவராஜபாளையத்தில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு மருத்துவம் பாா்த்து வந்த விமலா (47), குடியாத்தம் நகரைச் சோ்ந்த பெல்லியப்பன் (51), துக்காராமன் (53), ஜோதிப்பிரியா (40), ரேவதி (36), கே.வி.குப்பம் மேல்மாயிலைச் சோ்ந்த செல்வராஜ் (61), போ்ணாம்பட்டு மத்தூரைச் சோ்ந்த பாபு (50) உள்பட 8 பேரை கைது செய்ததுடன், மருத்துவக் குழுவினரின் முன்னிலையில் அவா்கள் பயன்படுத்தி வந்த மருத்துவ சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட போலி மருத்துவா்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், கைது செய்யப்பட்ட போலி மருத்துவா் ஜோதிப்பிரியா கடந்த ஆண்டு தவறான சிகிச்சை அளித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிறைக்குச் சென்று வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.