நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கி...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்துப்பொடி; வாழைத்தார்
சிராமலை
"இந்த பூமிக்கு வயது சுமார் 460 கோடி ஆண்டுகளாம். எங்கள் சிராமலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டுகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இமயமலையின் வயதே சுமார் 4 கோடி ஆண்டுகள் தானாம். அப்படியானால் எங்கள் சிராமலையின் சிறப்பையும் பழைமையையும் என்ன என்பது?
இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்த எங்கள் மலையில் ஈசன் கோயில் கொண்டது அற்புதம் அல்லவா!
இன்றைக்குக் குழந்தை வரம் வேண்டி மக்கள் ஃபெர்ட்டிலிட்டி செண்டர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்கள் எல்லாம் ஒருமுறை இங்குவந்து எங்கள் ஈசனை தரிசிக்க வேண்டும். எந்நாட்டவர்க்கும் இறைவனாய் விளங்கும் எங்கள் ஈசனை ஒரு முறை வந்து தரிசித்து வழிபட்டால் வாழ்க்கை மாறுகிறதா இல்லையா என்று நீங்களே பாருங்கள்."
இப்படித்தான் சிராமலை உள்ள ஊர் மக்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள். 'அது என்ன சிராமலை... அது எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா?'
சிராமலை என்பது மலைக்கோட்டையையே குறிக்கும். சிராமலை இருந்த ஊர் ஆதலால் அதைத் திருச்சிராப்பள்ளி என்றார்கள் முன்னோர்கள்.
'சிரகிரி,’ 'திருச்சிரபுரம்' எனப் பல்வேறு பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு. அதைத்தான் ஆங்கிலேயர் உச்சரிக்கத் தெரியாமல். 'டிரிச்சினாபள்ளி' என்று சொல்லிவிட்டான். இன்று அதை நாம் அழகு தமிழில் திருச்சி என்றும் திருச்சிராப்பள்ளி என்றுமே அழைக்கிறோம்.

திருச்சிராப்பள்ளி
திருச்சியில் எங்கிருந்து நோக்கினாலும் காட்சி கொடுக்கும் இறை அந்த சிராமலை.
ராவணனின் சகோதரனான திரிசிரன், தவமியற்றி இங்குள்ள ஈசனை பூஜித்துப் பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர் என்பார்கள்.
5 -ம் நூற்றாண்டில் சமணர்களின் ஒருவரான சிரா என்பவர் வந்து பள்ளி அமைத்துத் தங்கியதால் சிராபள்ளி எனப்பட்டது என்போரும் உண்டு. திரு என்னும் மரியாதை மொழி சேர்ந்து திருச்சிராப்பள்ளி ஆனது என்றும் சொல்வார்கள்.
இந்தத் தலத்தை 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ‘திரிசிரபுரம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
இந்தத் தலத்தில் உமாதேவி, பிரம்மன், இந்திரன், அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், சாரமா முனிவர், சோழன், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் மற்றும் வண்டு ஆகியோர் வந்து ஈசனை பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.
இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்களும், அப்பரும் மாணிக்கவாசகரும் முறையே நான்கு மற்றும் இரண்டு பாடல்களும் பாடியுள்ளனர்.
கயிலாய மலைக்குக்கு நிகரான மலை இது என்பது ஆன்றோர் கருத்து. எனவே இதை இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர்.
இத்தல ஈசன் தாயுமானவர் ஆனது எப்படி?
திருச்சியில் வாழ்ந்த தனகுத்தனின் மனைவி ரத்னாவதி. ரத்னாவதி கர்ப்பிணியாக இருந்தபோது அவளுக்குப் பேறு காலம் நெருங்கியது. அவளுக்கு உதவ காவிரிபூம்பட்டினத்தில் இருந்து அவளின் தாயார் புறப்பட்டார்.
அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் செய்வது அறியாது அவள் தாய் தவித்தாள். ரத்னாவதியோ பிரசவ வலியால் துடித்தாள்.
‘தாய் இன்னும் வரவில்லையே!’ என வருந்திய ரத்னாவதி ஈசனைத் தொழுதாள். பேறுகாலத்தின் சரியான நேரத்தில் ஈசனே தாய் வடிவில் வந்து, வேண்டிய உதவிகளைச் செய்தார்.
வெள்ளம் வடிந்ததும் ரத்னாவதியின் உண்மைத் தாயார் ஓடோடி வந்தார். அங்கு, தன்னைப் போலவே மற்றொரு தாய், மகளுக்கு உதவுவதை அறிந்து வியந்தார்.
இந்த இருவரில் தன் உண்மையான தாய் யாரென்று அறிய முடியாமல் குழம்பினாள் மகள். அப்போது பேறு காலத்தில் உதவிக்குத் தாய் உருவில் வந்த ஈசன் மறைந்து அதற்கு பதிலாக இடப வாகனத்தில், மட்டுவார் குழலம்மையுடன் செவ்வந்தி நாதராக காட்சி தந்தார் ஈசன்.
ரத்னாவதியும் அவள் தாயாரும் ஈசனை நன்றிப் பெருக்குடன் தொழுது வணங்கினர். அன்று முதல் திரிசிராமலை அருள்மிகு செவ்வந்திநாதருக்குத் தாயுமானவர் எனும் திருப்பெயர் வழங்கலாயிற்று.
இந்த நிகழ்வுகளை விளக்கும் சித்திரங்கள் கோயிலின், சித்திர மண்டப திருச்சுற்றிலும், மேல் விதானத்திலும் இடம்பெற்றுள்ளன.

மலைக்கோயில்
மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி, மட்டுவார்குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை.
உச்சியில் விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை என மூன்று பகுதிகளாக மலை அமைந்துள்ளது.
மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.
உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து படி ஏறினால், மௌன சுவாமிகள் மடம், முருகன் சந்நிதி, நூற்றுக் கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில் மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன், அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் அருள்மிகு தாயுமானவரை தரிசிக்கலாம்.
இந்தக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் ஆகியவை உள்ளன.
சகஸ்ரலிங்க மண்டபத்தில் பல லிங்கங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் இறை அன்பர்களாலும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப் பட்டவை.
கோயிலுக்குச் செல்லும் வழியில் இடப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் அழகான சலவைக்கல் மண்டபம் ஒன்றும் உள்ளது.
இங்கு சித்திரை மாதத்தில் நிகழும் பெருந்திருவிழாவின் 5-ம் நாள் செட்டிப் பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சுகப் பிரசவம் நிகழ்வதற்காக சுக்கு வெல்லம் கலந்த மருந்துப் பொடி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்தினால் பலன் அடைந்தோர் ஏராளம்.
மலைமேல் கோயிலில் சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியில் சித்திர மண்டபம் உள்ளது. இது அம்மன் கோயிலுக்கு மேலேயே மாடிக் கட்டடமாக அமைந்துள்ளது.
இங்கு நடராசர் திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று கங்காள மூர்த்தி. வானிலிருந்து வேகமாக இறங்கிய கங்கையை தன் சடை முடியில் தாங்கிய இறைவன் அதை பூமியில் பாய விட்டதை சித்திரிக்கும் சிவரூபம்.
உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள தென்புற குடவரைக் கோயிலில் செதுக்கட்டுள்ள கங்காள மூர்த்தி சிற்பம், கலைநுட்பமும், கலைநயமும் கொண்டது. இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய கலைப் பணி.
அருள்மிகு மட்டுவார் குழலம்மை என்கிற சுந்தர குந்தளாம்பிகை மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ‘மட்டு’ என்றால் தேன். தேன் நிறைந்த மலர்களால் தொகுக்கப்பட்ட மாலையை அணிந்த, நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் இந்தப் பெயர். இந்த அம்பிகையின் சந்நிதியில் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.
திருவையாறு தியாகராஜ சுவாமிகள், இந்த அம்பாளின் மீது பாடல்கள் பாடி உள்ளார்.
அடுத்து மேற்கு நோக்கிய நிலையில் தாயுமானவர் சந்நிதி. தாயுமானவர் சந்நிதி இரண்டு அடுக்குகள் கொண்டது. கருவறையில் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கும் இந்த இறைவனுக்கு செவ்வந்திநாதர், திருமலைக்கொழுந்தீசர், தாயுமானவர், திருமலைப் பெருமான் அடிகள், மாத்ருபூதேஸ்வரர் ஆகிய திருப்பெயர்களும் உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரிய லிங்கங்களில் தாயுமானவரின் லிங்கத் திருமேனியும் ஒன்று. லிங்கம் மேற்கு நோக்கி இருப்பதால் எதிரில் வழக்கப்படி உள்ள நந்தி கிடையாது. அதற்கு பதிலாக நந்தியம்பெருமான் தெப்பக்குளம் அருகே கோயில் கொண்டுள்ளார். மேற்கு நோக்கியுள்ள இறைவனின் முதுகுப்புறத்தைப் பார்த்தபடி நந்தியும், மேற்கு நோக்கியுள்ளது அதிசயம்தான்.
பங்குனி மாதம் 23, 24, 25 தேதிகளில் இங்குள்ள சிவலிங்கத்தின் மீது கதிரவனின் மாலை நேரக் கதிர்கள் படிவதுண்டு. இதை சூரிய பூஜை என்கின்றனர்.
தாயுமானவருக்கு நெய்யினால் பாத அபிஷேகம் மற்றும் பாத காணிக்கை செலுத்தி அந்த நெய்யை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையில்லாத தம்பதிக்குக் குழந்தை பிறக்கும். இந்தக் கோயிலின் தலமரம் வில்வம். இது பாராவாசல் நந்தவனத்தில் உள்ளது.
கர்ப்பமுற்ற பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வர். பிரசவம் ஆனவுடன் தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி, அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல் ஆட வைத்த பிறகு, அங்கு வரும் பக்தர்களுக்குப் பழங்களைப் பிரசாதமாக விநியோகிப்பர்.
தாயுமானவர் திருக்கோயில் காலை 5 மணி முதல் 12 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.