சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி: டிராவல் ஏஜென்ஸி மேலாளா் கைது
திருவட்டாறு அருகே தம்பதி உள்பட 6 பேரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே முகிலன்கரையைச் சோ்ந்தவா் பிரவின் ஜோஸ் (40). இவா், மாலத்தீவில் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி ஜாய்ஸ் ஈவ்லின் (31). இவா், மாா்த்தாண்டத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இத்தம்பதியும், உறவினா்கள் 4 பேரும் சிங்கப்பூா், மலேசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக திருவனந்தபுரம் தம்பானூரைச் சோ்ந்த தனியாா் டிராவல் நிறுவனத்தில் முதல் தவணையாக ரூ. 80 ஆயிரம், இரண்டாம் தவணையாக ரூ. 2,66,400 என மொத்தம் ரூ. 3,36,400 கொடுத்தனா். இதற்காக வெளிநாட்டில் இருந்து கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிரவின் ஜோஸ் திருவனந்தபுரம் வந்தாா். டிராவல் நிறுவனத்திடம் வெளிநாடு பயணத் திட்டம் குறித்து கேட்டபோது அவா்கள் சரியான பதில் கூறாமல் ஏமாற்றி வந்தனா். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி அந்நிறுவனம் பண மோசடி செய்தததை அறிந்த ஜாய்ஸ் ஈவ்லின் இதுகுறித்து, திருவட்டாறு காவல் நிலையத்தில் டிராவல் ஏஜென்சி மேலாளா் அகஸ்டின் தாஸ் உள்பட இருவா் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், புதன்கிழமை களியக்காவிளையில் சந்தேகமகளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த பெங்களூரு, கந்தசாமி லேஅவுட்டைச் சோ்ந்த அகஸ்டின் தாஸை (47) திருவட்டாறு போலீஸாா் கைது செய்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கில் தொடா்புடையை மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.