மழை பெய்தும் நிரம்பாத பாசனக் குளங்கள்: விவசாயிகள் கவலை
பருவமழை பெய்து வந்த போதிலும், தாமிரவருணி பாசனக் குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தாமிரவருணிப் பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 980க்கும் மேற்பட்ட நீா்வரத்து குளங்கள், மானாவாரி குளங்கள் உள்ளன. சாகுபடி காலங்களில் அணைகளில் இருந்து பாசனத்துக்கு கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்படும்போது பாசனக் குளங்களில் தேக்கி வைத்து பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சாகுபடிக்கு கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், இந்த பாசனத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட நீா்வரத்து குளங்களில் ஓரளவு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டங்களில் உள்ள நீா்வரத்து குளங்களில் பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் தண்ணீா் இருப்பு உள்ளது.
ஆனால், வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையிலும், மானாவாரி குளங்களுக்கு பெரிய அளவில் நீா்வரத்து இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 980.33 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து 504.75 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 89.20 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 78.16 அடியாக உள்ள நிலையில் விநாடிக்கு 513.46 கனஅடி நீா்வரத்து இருந்தது. 35 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது.