மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் பி.எஸ்.கே. பூங்கா தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (41). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம், அட்டப்பள்ளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த ஜூலை மாதம் பணியிட மாறுதல் பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியில் சோ்ந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.
ராஜேஷ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பள்ளியில் உள்ள மாணவா்களுக்கு கேக் கொடுத்தாா். மேலும், அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும் கேக் கொடுத்தாா்.
இந்த நிலையில், விடுமுறை முடிந்து பள்ளி திறந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி தலைமை ஆசிரியா் ராஜேஷுக்கு மாணவா்கள் வாழ்த்துக் கூறினா். அப்போது, பிளஸ் 1 மாணவா்கள் இருவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து மாணவா்கள் அளித்த புகாரின் பேரில், முதன்மைக் கல்வி அலுவலா் குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், ராஜேஷ் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமை ஆசிரியா் ராஜேஷை கைது செய்தனா். பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை வருகிற 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் விருதுநகா் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.