மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்புகிறார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
கோவை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினா் அல்ல; திமுக ஆதரவாளா் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாது எனக் கூறிய பின்பும் சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றும் அவசியம் இல்லை எனவும், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினா் அல்ல; திமுக ஆதரவாளா் எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புவதாகவும் விமர்சித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கடந்த 15 நாட்களாக திமுக அமைச்சர்கள் பல்வேறு விதமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். குறிப்பாக சட்ட அமைச்சர் ரகுபதி, அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஞானசேகரன் திமுகவில் இல்லை என கூறினர். இப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் கட்சியின் அனுதாபி எனக் கூறி தப்பிக்க முயல்கிறார். மக்களை திசை திருப்புவதற்காக இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால் இப்போது எஸ்ஐடி ஒரு அதிகாரியை கைது செய்துள்ளது. எவ்வாறு மாநில அரசு பொய்யான தகவல் அறிக்கையை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், அதுவே தீர்வு என இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க |மாணவிக்கு நீதி உறுதி: அண்ணா பல்கலை. விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலின்
டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசே கூறியுள்ளது. மேலும், மாநில அரசு இதில் முடிவு எடுக்க வேண்டும், அதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் உள்ளார். மூத்த அமைச்சர்களை மதுரைக்கு அனுப்பி மக்களோடு பேசி இருந்ததால் இந்த மாபெரும் ஊர்வலம் நடைபெற்று இருக்காது என கூறினார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, பெரியார் அவ்வாறு பேசியதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை இப்போது பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என கருதுகிறேன். காரணம் பொதுமக்கள் இப்போது அரசியலை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கியுள்ளனர். பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும். அதே நேரத்தில் சீமான் அவர்களிடம் விசாரணைக்காக காவல்துறையினர் வந்தால் பெரியார் பேசியதற்கான ஆவணங்களை வழங்கவும் தயாராக உள்ளேன் எனக் கூறினார்.
கோவை உடையாம்பாளையம் பகுதியில் சாலையோர பீப் உணவகம் நடத்தி வந்த நபர்களோடு பாஜக உறுப்பினர் வாக்குவாதம் செய்த விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை, அந்த காணொளியை தானும் பார்த்ததாகவும், முழு காணொளியை வெளியிடாமல் பீப் குறித்து அவர் பேசிய ஒரு நிமிட விடியோ மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கக் கூறி காவல்துறையினிடனும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்த பகுதியில் கோவிலின் அருகே மாட்டிறைச்சி உட்பட எல்லாவித அசைவ உணவுகளும் விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அதுவே அந்த பாஜக தொண்டரின் நிலைப்பாடாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
யுஜிசி விவகாரத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கருத்துகளை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக புதிய யுஜிசி விதிமுறைகளின் மூலம் பேராசிரியர்களின் பணி உயர்வுக்கான நெட் தேர்வு வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் துணை வேந்தர் தேர்வில் ஆசிரியர் பணி மற்றும் ஆசிரியர் பணி தொடர்புடையவர்கள் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேர்வில் யுஜிசி, பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் ஆளுநர் என மூன்று தரப்பினரின் கருத்துகளும் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டு துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிப்ரவரி 5 ஆம் தேதி வரை எதிர்ப்பதற்கான கருத்துகளை தெரிவிக்கலாம் என அண்ணாமலை கூறினார்.