வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்
"மாண்பில்லாத இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி வந்தார்.

கூடலூரில் நேற்று உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வம் பெருந்தகையின் அரசியல் வாழ்க்கை குறித்துப் பேசுகையில், யாசகர்களின் சட்டையைப் போன்றது எனக் கொச்சை மொழியில் இழிவாகப் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அ.தி.மு.க தொண்டர்களை அப்போதே முகம் சுழிக்கச் செய்திருக்கிறது. இந்தச் சர்ச்சை பேச்சு தற்போது இணையத்தில் பரவி கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துத் தெரிவித்த நீலகிரி காங்கிரஸ் கமிட்டியினர், "ஓட்டை, கிழிசல் சட்டை அணிபவர்களை இழிவு படுத்தும் விதமாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விளிம்புநிலை மக்களால் ஆட்சியில் அமர்ந்துவிட்டு அவர்கள் குறித்தே இழிவாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

தேர்தலில் தோல்வி பயம், உட்கட்சி பிரச்னையால் பதவி பயம் போன்ற காரணங்களாலேயே இப்படிக் கொச்சையாகப் பேசியிருக்கிறார். மாண்பில்லாத இ.பி.எஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் விளிம்புநிலை மக்களை இழிவாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி மீது நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை புகார் மனு அளிக்க இருக்கிறோம் " என்றனர்.