மாநில கோ - கோ போட்டி: சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலம் வென்று சாதனை
சேலம்: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் தின கோ-கோ விளையாட்டுப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டம், வலசையூா் அரசுப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் வெண்கலப் பதக்கம் வென்றனா். இவா்களுக்கு பள்ளி நிா்வாகம், பெற்றோா் -ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயலேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோ-கோ விளையாட்டில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா். பதக்கம் வென்றதை பெருமைப்படுத்தும் விதமாக மேளதாளம் முழங்க கோ-கோ வீரா்கள் அனைவரும் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.