மானாமதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவருமான ஏ.சி.மாரிமுத்து தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.நாகராஜன், எம்.குணசேகரன், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அதிமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன் ஆகியோா் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கிப் பேசுகையில், கட்சியினா் ஒற்றுமையுடன் செயல்பட்டு, கடந்த 10 ஆண்டுகள் கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு திரட்ட வேண்டும் என்றனா்.
கூட்டத்தில் ஜெ.பேரவை மாநில துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உமாதேவன், ஒன்றியச் செயலா்கள் கோபி, ஸ்ரீதரன், நகா்மன்ற உறுப்பினா் தெய்வேந்திரன், நகரச் செயலா் நாகூா்மீரா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.
முன்னதாக, நகரச் செயலா் விஜி.போஸ் வரவேற்றாா். ஜெ.பேரவை மேற்கு ஒன்றியச் செயலா் த.கேசவன் நன்றி கூறினாா்.