வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி ம...
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 4 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை அமா்த்த சிறப்பு ஆள்தோ்வுகள் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளாகும் நிலையில், இதுவரை அத்தகைய சிறப்பு ஆள்தோ்வு நடத்தப்படவில்லை.
சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு விட்டு, அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் டிச.3-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு ஆள்தோ்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
நிகழ் நிதியாண்டின் முடிவுக்குள் அனைத்துப் பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.