வாழப்பாடி: குடும்பத் தகராறால் ஆற்றில் குதித்த கணவர் உயிருடன் மீட்பு; கர்ப்பிணி மனைவி மாயம்!
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் குடும்பத் தகராறில் மனமுடைந்து வசிஷ்ட நதியில் குதித்த தனியார் வாகன ஓட்டுநர் உயிரோடு மீட்கப்பட்டார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இவரது மனைவியான கர்ப்பிணிப் பெண்ணை இரு நாள்களாக வாழப்பாடி தீயணைப் படையினர் தேடி வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த பேளூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தனியார் வாகன ஓட்டுநர் ராமு(27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமடைந்த மோகனாம்பாள், பேளூர் அருகே வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதி பெரு வெள்ளத்தில் குதித்துள்ளார்.
இதையும் படிக்க : கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!
இவரை தொடர்ந்து, இவரது கணவர் ராமுவும் வஷிஷ்டநதியில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில், ஆற்றுக்குள் செல்போன் டவரை பிடித்துக் கொண்டு தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனர்.
ஆற்றில் குதித்த இளம்பெண் மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து தெரியவந்ததால், இது குறித்து வாழப்பாடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படை அலுவலர் பெரியசாமி தலைமையிலான மீட்பு படையினர், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 மாத கர்ப்பிணியான இளம்பெண் மோகனாம்பாளை, இரண்டாவது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் மனமுடைந்த தம்பதி, வசிஷ்டநதியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம், இவரது உறவினர்கள் மற்றும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.