கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நி...
நடிப்பிலிருந்து ஓய்வு! பிரபல நடிகர் அறிவிப்பு!
பிரபல பாலிவுட் நடிகர் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லூடேரா படத்தின் மூலம் 2013-ல் நடிகராக அறிமுகமானவர் விக்ராந்த் மாஸே. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ கவனம் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து, கின்னி வெட்ஸ் சன்னி, தில் ரூபா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கடந்தாண்டு வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படம் இவரின் திரைவாழ்க்கையையே மாற்றியது. இந்தியளவில் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் விக்ராந்த் மாஸே தன்னை சிறந்த நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
இந்தாண்டில் செக்டர் - 36 படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். இறுதியாக, சபர்மதி ரிப்போர்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது, இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விக்ராந்த் மாஸே நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆண்டாக இருந்தது. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஆனால், ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக இப்போது வீட்டைக் கவனிக்க முடிவெடித்திருக்கிறேன். அடுத்தாண்டில் (2025) இறுதியாக ஒருமுறை நாம் சந்திப்போம். இறுதி 2 திரைப்படங்களும் பல ஆண்டுகளுக்கான நினைவுகளும்... மீண்டும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் மாஸேவின் திரை வாழ்க்கை சூடு பிடித்திருக்கும் காலத்தில் அவர் இந்த முடிவை எடுத்தது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. நடிகை ராஷி கன்னா உள்ளிட்டோர் முடிவை மாற்றுங்கள் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.