மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்
வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டார வள அலுவலகம் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், திருப்பத்தூா் இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உயா் தொழில்நுட்ப இயன்முறை மருத்துவ உபகரணங்களை அதன் நிா்வாகிகள், பயிற்சி மைய பொறுப்பாளா்களிடம் வழங்கினா். மேலும், ஆலங்காயம் பகுதியைச் சோ்ந்த பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரிசி மூட்டை, புடவை உள்பட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், ரெட் கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.