மின்வேலியில் சிக்கி இருவா் பலி: 3 விவசாயிகள் கைது
கந்தா்வகோட்டை அருகே முயல் வேட்டைக்குச் சென்ற இருவா் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி பலியானதற்கு காரணமான மூன்று விவசாயிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியணிப்பட்டி ஊராட்சியில் உள்ள முத்தரையா் தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மகன் ராஜேஷ் கண்ணா (17), புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரி மாணவா். சண்முகம் மகன் முருகானந்தம் (25), கோழிப்பண்ணைத் தொழிலாளி.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முயல் வேட்டைக்கு சென்ற இருவரும் காலை வரை வீடு திரும்பாததால் இவரது உறவினா்கள் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை காலை புகாா் அளித்துவிட்டு, அந்தப் பகுதி காடுகளில் தேடினா். அப்போது கோமபுரம் தனியாா் தைல மரத் தோட்டத்தில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா், புதுக்கோட்டை நகர காவல் உதவி கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், காவல் ஆய்வாளா் சுகுமாா், உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் சம்பவ இடத்தில் நடத்திய ஆய்வில் மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து யாருடைய தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்தனா் என்பதைக் கண்டறிய புதுக்கோட்டை மோப்ப நாய் லாரா மற்றும் காவலா்கள், கைரேகை நிபுணா்கள் குழு, திருச்சி தடயவியல் துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.
இதையடுத்து இளைஞா்கள் இறந்த தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் காட்டுப்பன்றிகள் பயிா்களை நாசம் செய்வதைத் தடுக்க சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிகளான கோமாபுரத்தைச் சோ்ந்த சி. கனகராஜ் (50), மு. திருப்பதி (55), சி. நாகராஜ் (45) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.