அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
மிஸ்டர் கழுகு: கலைக்கும் மலை... கடுகடுத்த ‘ஷா’... கதறும் நயினார்!
அலுவலகத்துக்குள் நுழைந்ததும் மென் வெளிச்சத்தில் கேபினில் அமர்ந்திருந்த கழுகாரைப் பார்த்து அதிர்ந்து போனோம். “எப்போது வந்தீர்...” என்று நாம் ஆச்சர்யமாகக் கேட்க, “அதெல்லாம் ரகசியம்...” என்று சிரித்தார். “என்ன... உமது நடவடிக்கைகளெல்லாம் அண்ணாமலை நடந்துகொள்வதுபோல இருக்கின்றன... சரி, என்ன சாப்பிடுகிறீர்..?” என்று நாம் கேட்க, “அண்ணாமலைபோல என்று சொல்லிவிட்டீர், நான் கோபத்தில் இருக்கிறேன். எனக்கு ஒன்றும் வேண்டாம்... கொஞ்சம் சுடுதண்ணீர் மட்டும் கொடும்...” என்றபடி செய்திகளைச் சொல்லத் தொடங்கினார் கழுகார்.
“அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு இது போதாத காலம்தான்போல. ‘என்.டி.ஏ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை’ என்ற விரக்தியில், கூட்டணியிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். அவரைத் தொடர்ந்து தினகரனும் இப்போது வெளியேறிவிட்டார். கடந்த இதழிலேயே, மூப்பனார் நினைவேந்தலுக்கு அழைக்கப்படாத வருத்தத்தில் தினகரன் இருப்பதைச் சொல்லியிருந்தேன். தனக்கான மரியாதை கூட்டணியில் தரப்படவில்லை என்கிற கடும் அதிருப்தியில் இருந்தவரைச் சமாதானப்படுத்த, டெல்லி மேடத்தின் தரப்பிலிருந்து முயன்றிருக்கிறார்கள். ஆனால், தொடர்பு எல்லைக்குள் தினகரன் வரவில்லையாம். ‘இனி சமாதானத்துக்கு வேலையில்லை. அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி இருக்கும் வரையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை’ என முடிவெடுத்துத்தான், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார் தினகரன். முன்னதாக, இந்தத் தகவலை அண்ணாமலையிடம் விவாதித்தாராம் தினகரன்.”
“சரியாப்போச்சு... அப்புறம்...”
“ ‘நீங்க எப்பவும் சரியான முடிவுதான் எடுப்பீங்கண்ணா... டெல்லித் தலைமை உங்கமேல நல்ல மதிப்பு வெச்சிருக்கு. ஆனால், இங்க இருக்கறவங்களுக்குத்தான் உங்க வெயிட்டு தெரியலை. கூட்டணியைவிட்டு வெளியேறி கெத்து காட்டினாத்தான், டெல்லியின் பார்வை உங்கமேல விழும். நீங்க முடிவெடுங்க... உங்க பின்னால நான் இருக்கேன்...’ என்று தினகரனை ஏற்றிவிட்டு, கூட்டணியைக் கலைத்து விட்டிருக்கிறார் மலை. என்.டி.ஏ-விலிருந்து வெளியேறி ‘சக்சஸ்’ கட்சியுடன் கூட்டணி பேசும் வேலையிலும் இறங்கியிருக்கிறாராம் தினகரன்” என்றவருக்கு, கண்ணாடி டம்ளரில் சுடுதண்ணீர் கொடுத்தோம். “சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, சுடுதண்ணியே கொடுக்கறதா...” என்று புன்னகைத்தபடியே வாங்கிப் பருகியவரிடம்,
“ஆனால், நயினார் தரப்பிடம் அமித் ஷா கடுகடுத்தாராமே... அது ஏன்?” என்றோம்.

“சொல்கிறேன். சமீபத்தில், நயினார் தலைமையில் டெல்லிக்குப் பறந்த தமிழக பா.ஜ.க சீனியர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலின்போது, நம் கூட்டணிக்குள் வேண்டுமென்றே சிலர் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்கியதால்தான், நாம் வெற்றியை இழந்தோம். இல்லையென்றால், 10 எம்.பி-க்களாவது நமக்குக் கிடைத்திருப்பார்கள். தற்போதும், ஒரு சிலரின் தனி ஆவர்த்தனத்தால் பூசல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது...’ என ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக சீனியர்கள். அதைக் கேட்டதும் கொதிநிலைக்கே சென்ற அமித் ஷா, ‘நான் இங்கு உங்களை மற்றவர்கள்மீது குறை சொல்வதற்காக வரச் சொல்லவில்லை. உருப்படியான விஷயங்களைச் சொல்லுங்கள். முடிந்துபோன விஷயங்களைப் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. 2026 தேர்தலில் நம் கூட்டணி வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன ஐடியா வைத்திருக்கிறீர்கள்... உங்களால் ஒரு பூத் கமிட்டியைக்கூட ஒழுங்காக அமைக்க முடியவில்லை. மாநிலத் தலைவர் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம், அமைச்சர் பதவி, ஆளுநர் பதவி, இப்போது துணை ஜனாதிபதி என உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவிட்டோம். ஆனாலும், தமிழகத்தில் ஒரு ரிசல்ட்டும் இல்லை. இன்னும் ஸ்கூல் பிள்ளைகள் போல, `கிள்ளிவிட்டான், திட்டிவிட்டான்’ எனக் காரணங்களைச் சொல்கிறீர்கள். அங்கு நடக்கும் அனைத்தும் எனக்குத் தெரியும். எனவே, `அவர் அதைச் செய்துவிட்டார் இவர் இதைச் செய்துவிட்டார்’ என்று சொல்லிக் கொண்டிராமல், தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்’ எனக் கடுகு பொரிந்ததுபோலக் கடுகடுத்திருக்கிறார்.”
“உட்கட்சிப் பிரச்னையைப் பற்றிப் பேசாதீர்கள். அது எப்போதும் இருக்கத்தான் செய்யும் என்கிறார். அப்படித்தானே..?”
“ஆமாம். இங்கு கட்சியை வளர்க்க இவர்களும் உருப்படியாய் எதுவும் செய்யவில்லைதானே... அதை அமித் ஷா சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். வேலை நடக்கவில்லை என்பது தெரிந்துவிட்டதால்தான் எரிச்சலில் கடுகடுத்திருக்கிறார் அமித் ஷா. அதேநேரம், ‘ஓ.பி.எஸ்-ஸும் தினகரனும் கூட்டணியிலிருந்து வெளியேறியதன் பின்னணியிலும், உட்கட்சிப்பூசல்களின் பின்னணியிலும் மலையின் கைங்கர்யம் இருக்கிறது. கட்சிக்குள் மலையின் அட்ராசிட்டியை ஒடுக்கினாலே, கட்சியை கன்ட்ரோலில் எடுத்து லீட் செய்துவிடுவேன். இதைத்தான் டெல்லி தலைமைக்குப் புரியவைக்கப் பார்க்கிறேன். ஆனால், அது எனக்கே நெகட்டிவ் ஆகிவிடுகிறது. நான் என்னதான் செய்ய...’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கதறிப் புலம்பியிருக்கிறார் நயினார். ‘அண்ணாமலையின் அட்ராசிட்டிகள் டெல்லி தலைமைக்குத் தெரியாமல் இருக்காது. இருப்பினும், அவர்மீது காட்டப்படும் கரிசனம், அவரை இன்னும் செகண்ட் ஆப்ஷனாக தலைமை வைத்திருக்கிறதோ..?’ என்கிற சந்தேகமும் பயமும்தான் நயினார் தரப்பைத் தூங்கவிடாமல் செய்கின்றனவாம்.”

“பாவம்தான் நயினார்... சரி, எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?”
“ ‘தினகரனின் இந்த மிரட்டலெல்லாம் நம்மிடம் எடுபடாது. அவர் போனால் போகட்டும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது...’ என்கிற மனநிலையில்தான் இருக்கிறாராம் எடப்பாடி. ஆனால், ‘இருவருக்கும் இடையேயான ஈகோ மோதலில், வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டுவிடுவார்கள்போலயே... இதையெல்லாம் பா.ஜ.க-வும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறதே...’ என அ.தி.மு.க சீனியர்கள்தான் புலம்புகிறார்கள்.”
“ம்... மணல் பிசினஸில் தலைமைக்கு நெருக்கமான ஆடிட்டர் குதித்திருக்கிறாராமே?”
“என் காதுகளுக்கும் அந்தச் செய்தி வந்தது. பட்டா இடங்களில் மணல் அள்ளும் திட்டத்துக்கு, புதுக்கோட்டை ‘கம்பெனி’க்கு ஆதரவாகத் தீவிரமாகவே ‘லாபி’ செய்துவருகிறாராம் அந்த ஆடிட்டர். ‘இதற்காக, 20 சதவிகித கமிஷன் ஆடிட்டருக்கு வழங்கப்படவிருக்கிறதாம். ‘துறை மேலிடத்தைத் தனியே கவனித்துக்கொள்வதாக’ புதுக்கோட்டை கம்பெனி கூறியிருப்பதால், ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பட்டா இடங்களின் உரிமையாளர்களையெல்லாம் சந்தித்து, மணல் அள்ளுவதற்கான ஒப்புதலை பெறத் தொடங்கியிருக்கிறது ஆடிட்டர் டீம். ஆட்சி முடிவடைவதற்குள் ஒரு பெரும் தொகையோடு துபாயில் செட்டிலாகிவிட ஆடிட்டர் தீர்மானித்திருப்பதால், வசூல் வேட்டை தூள் பறக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.”
“நடக்கட்டும்... நடக்கட்டும்... மான்செஸ்டர் மாநகராட்சியில் என்ன பஞ்சாயத்து?”
“அதுவா... மாநகராட்சியில் குறிப்பிட்ட தொகைக்கான டெண்டர் பணிகளை கவுன்சில் ஒப்புதல் இல்லாமல், மாநகராட்சியின் உயரதிகாரியே போட்டுவிட முடியும். அதன்படி, மான்செஸ்டர் மாநகராட்சியின் உயரதிகாரி, தனக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்துக்கு ஏகத்துக்கும் டெண்டர்களைப் போட்டு, கட்டிங் பெற்றிருக்கிறாராம். இந்த நிலையில், நகராட்சித்துறையை இயக்கும் ‘சூதானமான’ அதிகாரி ஒருவர், மான்செஸ்டர் மாநகராட்சியில் சமீபத்தில் ஆய்வுக்குச் சென்றாராம். அப்போது, அங்கு நடந்த தில்லாலங்கடிகளைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு மெமோ கொடுக்கவும் தயாராகிவிட்டாராம். ஆனால், இது குறித்துப் பேசும் மற்றொரு தரப்போ, ‘மெமோ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். வசூலில் பாதியைக் கேட்டுத்தான் பஞ்சாயத்தே நடக்கிறது’ என்கிறது” என்றபடி றெக்கையைச் சிலுப்பிக் கிளம்ப ஆயத்தமான கழுகார்,
“தமிழக காவல்துறையில் முக்கியப் பதவிகளுக்குப் பொறுப்பு அதிகாரிகளையே நியமிப்பது டிரெண்டாகிவிட்டதுபோல... சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்குப் பொறுப்பு அதிகாரியாக வெங்கடராமனை நியமித்த சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள் தலைநகரில் முக்கியமான பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், துணை கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர் எப்படி இணை கமிஷனர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்று காவல்துறையில் பெரும் பஞ்சாயத்தே நடக்கிறதாம்” என்றபடியே விண்ணில் பாய்ந்தார்.
அலட்சியம்!
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் சூழலில், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமலிருக்கும் சுகாதாரத்துறையின் செயல்பாடு!
அநியாயம்!
ராணிப்பேட்டையில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில், மனு கொடுக்க வந்த வெங்கடபதி என்ற முதியவரைத் தாக்கி, அவர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு போட்ட காவல்துறையின் செயல்!
ஆறுதல்!
பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இருந்த மத்திய அரசு, அரசியல் கணக்குகளுடன் தற்போதாவது ஜி.எஸ்.டி வரிக் குறைப்பில் ஈடுபட்டிருப்பது!