ஜப்பான்: பொது இடங்களில் வாசனை திரவியம் பயன்படுத்துவது அவமரியாதையா? - பின்னணி என்...
அதிமுக பொறுப்புப் பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை: செங்கோட்டையன்
அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது வேதனையளிக்கவில்லை. மகிழ்ச்சியே என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன். என்னை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே. ஆனால் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபியில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன்.
அப்போது, ஜனநாயக அடிப்படையில், என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சொன்னேன். கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும், எனது ஒருங்கிணைப்புப் பணி தொடரும். அதிமுகவில்தான் ஜனநாயகம் இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் கருத்துகளைக் கூறலாம் என மேடைதோறும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இன்று எனக்கு எதிரான நடவடிக்கைக்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார்.
மேலும், இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்தும். என் நலன் கருதி அல்ல, கட்சியின் நலன் கருதியே கருத்துக் கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமைக்கு கெடு விதித்திருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அவரது தம்பி கே.ஏ. சுப்ரமணியன் உள்பட ஆதரவாளர்கள் ஏழு பேரின் பொறுப்புகளையும் பறித்து உத்தரவிட்டுள்ளார்.
கட்சிப் பொறுப்பிலிருந்து செங்கோட்டையனை நீக்கி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அவசர ஆலோசனை நடத்தியிருந்தார்.
அதன்பிறகு வெளியான அதிமுக அறிக்கையில், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.