என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்...
ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை வருகிற செப். 13 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை வருகிற செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் 2 இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அதில் ஒரு இடம் ஸ்ரீரங்கம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் ஸ்ரீரங்கம் கோயில் முன்பிருந்தே விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாகவும் காவல்துறை அனுமதி பெற தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இன்று திருச்சி வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலை அல்லது நாளை விஜய்யின் பிரசாரம் குறித்த முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.