கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேத...
மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்
வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில், இந்த புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்ப உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) சனிக்கிழமை தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது, மீண்டும் தமிழகம் நோக்கி டிச.24-ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே நிலவும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.23) முதல் டிச.28-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.24, 25 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.23, 24 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 80 மி.மீ. மழை பதிவானது. ஆவுடையாா்கோவில் (புதுக்கோட்டை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) - தலா 60 மி.மீ, கேஆா்பி அணை (கிருஷ்ணகிரி), சிறுகமணி, நாவலூா் கோட்டப்பட்டு (திருச்சி), பையூா் (கிருஷ்ணகிரி), குளித்தலை (கரூா்), இலுப்பூா் (புதுக்கோட்டை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.