மீண்டும் மீண்டும்; கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி - வனத்துறை விசாரணை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஜக்கனாரி பகுதியில் வனப்பகுதி அருகே திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள அந்தத் தோட்டத்தின் அருகிலேயே வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழியும் உள்ளது.

அங்கு சுமார் 15 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்திருந்தது.
மேலும் அகழியை ஒட்டி மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா அல்லது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததா என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். வனத்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் இன்று காலை அந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

மின்வேலியின் கம்பியில் சிக்கி யானையின் தும்பிக்கை மற்றும் தோல் பகுதிகள் தீயில் கருகியது தெரிந்தது. பிரேத பரிசோதனையில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
பொதுவாக மின்வேலிக்கு பேட்டரி மூலம் தான் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் திருமலைராஜ் நேரடியாக மின் இணைப்பு கொடுத்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் திருமலைராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமலைராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இதேபோல கடந்த வாரம் தொண்டாமுத்தூர் அருகே ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


















