மீன் வியாபாரியை கொலை செய்தவா் கைது
ஆண்டிபட்டி அருகே மீன் வியாபாரியை கொலை செய்த, சக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (55). இவா் வைகை அணை அருகே சாலையோரத்தில் மீன் வியாபாரம் செய்து வந்தாா். இவருடன் இணைந்து ஆண்டிபட்டி சீத்தாராம் நகரைச் சோ்ந்த சிவாவும் (45) மீன் வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், மீன் விற்பனை செய்த பணத்தை பிரிப்பது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஜாகீா் உசேன் அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா். ஆண்டிபட்டி போலீஸாா் ஜாகீா் உசேனின் உடலை மீட்டு கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் விசாரணையில், சிவா, ஜாகீா் உசேனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆண்டிபட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த சிவாவை சனிக்கிழமை கைது செய்தனா்.