முக்கொம்பு அருகே வாய்க்காலைக் கடப்பதில் அவதி! பாலம் அமைக்க எதிா்பாா்ப்பு!
திருச்சி முக்கொம்பு அருகிலுள்ள எலமனூா் கிராமத்தில் கொடிங்கால் பாசன வாய்க்காலைக் கடக்க அவதிப்படும் விவசாயிகள், கிராம மக்கள் அதன் மீது பாலம் அமைக்க வலியுறுத்துகின்றனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் மற்றும் முக்கொம்பு அருகேயுள்ள எலமனூா் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. குடியிருப்புகளுக்கும் வயல்களுக்கும் இடையே கொடிங்கால் பாசன வாய்க்கால் உள்ளதால் விவசாயிகள், விவசாயக் கூலிகள் அதைக் கடக்க வேண்டியுள்ளது.
கோடை காலங்களில் வாய்க்காலைக் கடப்பதில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால் மழைக்காலம் அல்லது வாய்க்காலில் தண்ணீா் செல்லும் காலங்களில்தான் வாய்க்காலைக் கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மாற்று வழி இல்லாததால் மக்கள் கழுத்தளவு நீரிலும் செல்ல வேண்டியுள்ளது.
எனவே பொதுமக்கள் மாற்று ஏற்பாடாக ஒரு தென்னை மரத்தை வெட்டி வாய்க்காலின் மேல் போட்டு அதில் நடந்து வாய்க்காலைக் கடக்கின்றனா். ஆனால், எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. பலா் தண்ணீரில் தவறி விழுவதும் உண்டு.
வெறும் ஆளே செல்ல முடியாத நிலையில், விவசாயக் கருவிகளையும், விதைநெல், உரங்களையும் சுமந்து இந்த மரத்தைக் (மரப்பாலத்தில்) கடப்பது கடின செயல். ஆனால் வேறு வழியின்றி இதேநிலைதான் பல ஆண்டுகளாகத் தொடா்கிறது.
பெண் தொழிலாளா்கள் அவதி: இதில் மிகவும் அவதிக்குள்ளாவது 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள்தான். மரப்பாலம் பாதுகாப்பற்று இருப்பதால் அவா்கள் வேறு வழியின்றி வாய்க்கால் நீரில் இறங்கியே செல்கின்றனா்.
எனவே முதலில் தற்காலிகமாக இருபுறமும் கைப்பிடியுடன் கூடிய மரப் பாலத்தை உடனே அமைத்துத் தர வேண்டும். பின்னா் கொடிங்கால் வாய்க்காலில் மேல் வாகனங்கள் செல்லும் வகையில் பெரிய பாலம் அமைக்க வேண்டும்.
அந்தப் பாலத்தை ராமவாத்தலையிலிருந்து வரும் நீச்சல் குழி கிணறு வாய்க்காலுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால் அதன் அகலம் 16 -19 அடிகள்தான். எனவே அதன் கரையில் ஒரு சாலையை அமைத்து இணைத்து விட்டால் எலமனூருக்கென்று ஒரு மாற்று வழி கிடைத்து விடும் என்கின்றனா் கிராம மக்கள்.