A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை ...
`முதலில் அப்பா கேரக்டர்; இப்போ இயக்குநர் மாற்றம்' - 'வள்ளியின் வேலன்' சீரியலில் என்ன நடக்கிறது?
ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல், 'வள்ளியின் வேலன்'. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் ஜோடியாக அறிமுகமாகி, பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் இணைந்த சித்து - ஸ்ரேயா இருவரும் திருமணத்துக்குப் பிறகு இணைந்து நடித்தார்கள்.
'திருமணம்' தொடரில் நடித்த போது சித்து-ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி அந்த தொடருமே நல்ல வரவேற்பை பெற்றதால், 'வள்ளியின் வேலன்' தொடரும் அதே போல் ஹிட் ஆகும் என எதிர்பார்த்தது சேனல்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இந்தத் தொடர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்கின்றனர். இப்படி இருக்க, சில தினங்களுக்கு முன் இந்தத் தொடரில் ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நடித்த சாக்ஷி சிவா தொடரிலிருந்து விலகினார்.
'ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தருவதில் ரொம்பவே பிரச்னை தருகிறார்; எனவே தயாரிப்பு தரப்புதான் இவரை மாற்றி விட்டு வேறொரு நடிகரை அந்தக் கேரக்டருக்குக் கொண்டு வந்தது' என்கிறார்கள் சிலர்.
வேறு சிலரோ, 'ஆரம்பத்துல இருந்தே யூனிட்டுடன் இவருக்கு செட் ஆகலை. இவருக்கு டப்பிங் பேசிய ஆர்ட்டிஸ்டை தயாரிப்புத் தரப்பு அதிரடியா மாற்றியதுல கடுப்பாகி இவரே வெளியேறிட்டார்' என்கின்றனர்.
இந்தப் பிரச்னை தொடக்க நிலையில் இருந்த போதே விகடன் தளத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சாக்ஷி சிவா இந்தப் பிரச்னை தொடர்பாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டதாகத் தெரிகிறது. அதில் சீரியல் தொடர்புடைய சிலர் குறித்துக் கடுமையாகப் பேசியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.
சிவா வீடியோ வெளியிட்டிருந்தது குறித்து சேனல், மற்றும் சீரியல் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்து அதிருப்தி கிளம்பியதாகவும், தொடர்ந்து இந்தப் பிரச்னை சின்னத்திரை நடிகர் சங்கத்துக்குச் சென்றதாகவும் தெரிகிறது.
இன்னொருபுறம், சிவாவும் இது தொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்கத்திடம் சென்றிருக்கிறார்.
'பொது வெளியில் வீடியோ வெளியிட்டு விட்டு பிறகு பிரச்னையை சங்கத்துக்குக் கொண்டு வந்தால் எப்படி' எனக் கேட்ட சங்க நிர்வாகிகள் உடனடியாக வெளியிட்ட வீடியோக்களை டெலீட் செய்யும்படி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது சிவாவின் சமூக வலைதளப் பக்கத்திலிருந்து அவர் வெளியிட்டிருந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
எது எப்படி இருந்தாலும், சாக்ஷி சிவாவுக்குப் பதில் ஆடிட்டர் ஶ்ரீதர் கமிட் ஆகி அவர் நடிக்கும் காட்சிகளும் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்ட நிலையில், இப்போது இன்னொரு பிரச்னை உருவாகியிருக்கிறது. அதாவது தற்போது தொடரை இதுவரை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநரும் மாறியிருக்கிறாராம். முதல் எபிசோடிலிருந்து தொடரை இயக்கி வந்த ராஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் பிரதாப் இயக்கத் தொடங்கியிருக்கிறார்.
இவர் இதற்கு முன் 'சந்தியா ராகம்' தொடரை இயக்கிவராம்.
முன்பு அப்பா கேரக்டர், இப்போது இயக்குநர் என தொடர் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே ஏன் இத்தனை மாற்றங்கள் ஏன்? சீரியல் தொடர்பிலிருக்கும் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
'ஒரு ஹீரோ ஹீரோயின் ஜோடி சேர்ந்து நடிச்சு, அவங்களுக்கிடையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அதன் மூலமா அந்த சீரியல் ஹிட் ஆகறது பொதுவா நடப்பதுதான். ஆனா அதே ஜோடி திருமணத்துக்குப் பிறகும் ஜோடியா நடிக்கறாங்கன்னா, அந்த சீரியல் முன்பு போலவே ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தா, அது தமிழ் சீரியல் ஏரியாவைப் பொறுத்தவரை நடக்க மாட்டேங்குது. செந்தில் ஶ்ரீஜா ஜோடி நடிக்க ரொம்பவே ஹிட் அடிச்சது 'சரவணன் மீனாட்சி' சீரியல். ஆனா அதே ஜோடி திருமணம் செய்து கொண்ட பிறகு சேர்ந்து நடிச்ச சீரியல் அதே அளவு போகலை. இதே கதைதான் இந்த சீரியல் விஷயத்துலயும் நடந்திருக்கு. சீரியல் எதிர்பார்த்தபடி போகலைன்னா அதுல ஆர்ட்டிஸ்டுகள் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் வரிசை கட்டலைன்னாதான் ஆச்சரியம்' என்கிறார்கள் அவர்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...