``இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' - மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம...
மும்பை: கழிவறை ஜன்னலை உடைத்து கடத்தல் நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்; 17 குழந்தைகள் பத்திரமாக மீட்பு!
மும்பை பவாய் பகுதியில் உள்ள பி.ஆர்.ஸ்டூடியோவில் வெப் சீரிஸ் ஒத்திகைக்காக மும்பை, நவிமும்பை, கோலாப்பூர், சாங்கிலி, சதாரா போன்ற இடங்களில் இருந்து 100 குழந்தைகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அக்குழந்தைகளுக்கு கடந்த 5 நாட்களாக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அவர்களை ரோஹித் ஆர்யா என்பவர் அழைத்திருந்தார். அவர் சொந்தமாக அப்ஸரா மீடியா என்ற ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அவர் தனது வெப் சீரிஸிற்கு குழந்தைகளை தேர்வு செய்ய இந்த ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் திடீரென குழந்தைகளில் 83 பேரை மட்டும் விடுவித்துவிட்டு எஞ்சிய 17 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் குறிப்பிட்ட சிலருடன் பேச விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தார். குழந்தைகள் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டவுடன் பெற்றோர் ஸ்டூடியோவை சூழ்ந்தனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் ரோஹித் ஆர்யாவுடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தனக்கு எதிராக போலீஸார் எதையாவது செய்தால் கட்டடத்தில் தீவைத்துக்கொள்வேன் என்று மிரட்டினார். இதையடுத்து கமாண்டோ படை போலீஸார் வரவழைக்கப்பட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஸ்டூடியோ கழிவறை கிரில் ஜன்னலை உடைத்துக்கொண்டு போலீஸார் உள்ளே சென்றனர்.
தீயணைப்பு துறையினர் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். போலீஸாரை பார்த்ததும் ரோஹித் ஆர்யா தன்னிடம் இருந்த ஏர் கன் மூலம் சுட்டார். இதனால் போலீஸார் தற்காப்புக்கு திரும்ப சுட்டனர். இதில் ரோஹித் நெஞ்சு பகுதியில் ஒரு தோட்டா பாய்ந்தது. உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் செவன் ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டனர். உள்ளே 75 வயது பெண் ஒருவரும் சிக்கி இருந்தார். அவர் தலையிலும், கையிலும் காயம் ஏற்பட்டு இருந்தது.
இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி கூறுகையில்,''ஆர்யாதான் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் பாதுகாப்புக்கு காவல்துறையினர் பதிலடி கொடுத்தனர்.
அவரது கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் அவரை குழந்தைகளின் உயிரோடு விளையாட அனுமதிக்க முடியாது. எங்கள் குழு தற்காப்புக்காக திருப்பிச் சுட்டது. வேறு வழியில்லை'' என்று தெரிவித்தார். போலீஸாரின் இந்த ஆப்ரேசனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாராட்டினார். ரோஹித் தனது வீடியோவிலோ அல்லது போலீஸாருடன் பேசுகையிலோ தனது கோரிக்கைகள் குறித்து தெளிவாக கூறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில், இது மிகவும் சவாலான ஆப்ரேசன் என்று குறிப்பிட்டார்.
3 மணி நேரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. பள்ளியை சுத்தப்படுத்தும் பணியை ரோஹித் நிறுவனம் பெற்றதாக கூறப்படுகிறது.

அவரது நிறுவனம் மேற்கொண்ட பணிகளுக்கு அரசு ரூ.2 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளது. இதனால் முன்னாள் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார். எனவே தனது சொந்த பணத்தில் இருந்து சிறிது கொடுத்து உதவியதாக தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு தரப்பு கூறுகையில், ரோஹித் ஏற்கனவே மாணவர்களிடம் இதற்கான தொகையை வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா கல்விச் செயலாளர் ரஞ்சித் சிங் தியோல் இது குறித்து கூறுகையில்,''இந்த திட்டத்திற்காக ரோஹித் ஆர்யாவுக்கு ரூ.2 கோடி வழங்க எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. அவர் இந்த பணியை விருப்பப்பட்டு செய்தார். அவரது பணிக்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'மை ஷாலா, சுந்தர் ஷாலா' திட்டத்தை செயல்படுத்துவதற்காக அவர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார், ஆனால் அது நிறைவேறவில்லை. மகாராஷ்டிரா அரசு ரோஹித் ஆர்யாவுக்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை" என்று தியோல் கூறினார்.
புனேயை சேர்ந்தவரான ரோஹித் நாக்பூரில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் யூடியூபராகவும் செயல்பட்டார்.


















