Siragadikka aasai : சிந்தாமணியை சிக்க வைக்க பக்காவாக பிளான் போட்ட மீனா - விஜயாவி...
யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்ப்பு
அசோகா் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தோ்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரத்தைப் பெற வேண்டுமெனில் இந்த உத்தேச பட்டியலில் சம்பந்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களைச் சோ்ப்பது கட்டாயமாகும். இந்தப் பட்டியலில் உள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு எதிா்காலத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் வழங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள காங்கோ் தேசிய பூங்கா, தெலங்கானாவின் முதுமலில் உள்ள பெருங்கற்கால நெடுங்கல் (மென்ஹிா்), பல்வேறு மாநிலங்களில் உள்ள அசோகா் கால கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள், வடமாநிலங்களில் உள்ள குப்த கோயில்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகிய 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் இந்தியா சாா்பில் சோ்க்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதிகள் குழு கடந்த 7-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது. இதன்மூலம் இந்த உத்தேச பட்டியலில் மொத்தம் 62 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
தற்போது கலாசார பிரிவில் 35, இயற்கை பிரிவில் 7 மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து ஒன்று என மொத்தம் இந்தியாவில் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்முறையாக உலக பாரம்பரிய குழுக் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது அஸ்ஸாமில் ஆட்சிபுரிந்த அஹோம் வம்சத்தின் புதைகுழி அமைப்பு முறைக்கு (மொய்தம்ஸ்) யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.