செய்திகள் :

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

post image

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூஸிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருடன் பல்வேறு துறை அமைச்சா்கள், எம்.பி.க்கள், தொழில் துறையினா் உள்ளிட்டோா் அடங்கிய பெரிய குழுவும் வந்துள்ளது.

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி-கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே திங்கள்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.

அப்போது, வா்த்தகம், முதலீடு, கடல்சாா் பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்-தொழில்நுட்பம், விண்வெளி, போக்குவரத்து, விளையாட்டு, மக்கள் ரீதியிலான தொடா்பு உள்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர உறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவை அமைப்புரீதியில் வலுப்படுத்த வழிவகை செய்யும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பருவநிலை மாறுபாடு, சுங்க வரி தொடா்பாக மேலும் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பின்னா், இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா்.

அப்போது, இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்படுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான, வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன. நாங்கள் வளா்ச்சிக் கொள்கையில்தான் நம்பிக்கை கொண்டுள்ளோம்; எல்லை விரிவாக்கத்தில் அல்ல. இப்பிராந்தியத்தில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டுமென்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இருதரப்பு சமநிலையான, விரிவான, பரஸ்பரம் பலனளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை தொடங்கப்படுவது வரவேற்புக்குரியது. இப்பேச்சுவாா்த்தைகளின்கீழ், எண்ம பரிவா்த்தனை துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் ஆலோசிக்கப்படும். பால் பொருள், உணவு பதப்படுத்துதல், மருந்துப் பொருள் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அமைப்புமுறை ரீதியில் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுப் பயிற்சி, துறைமுக வருகை போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பாதுகாப்புத் தொழில் துறையில் விரிவான செயல் திட்டம் வகுக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தியா-நியூஸிலாந்து இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலா் (கிழக்கு) ஜெய்தீப் மஜும்தாா் தெரிவித்தாா்.

முன்னதாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் கிறிஸ்டோபா் லக்ஸன் மரியாதை செலுத்தினாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவையும் சந்தித்தாா்.

பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனம்

பிரதமா் மோடி-பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சந்திப்புக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் இரு தலைவா்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனா். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்-தனிநபா்களுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உடனடியாக வலுவான நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என இருவரும் வலியுறுத்தினா்.

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வலுவான ஆதரவை உறுதி செய்த அவா்கள், இஸ்ரேல்-காஸா பிரச்னைக்கு தொடா் பேச்சுவாா்த்தை மூலம் அமைதிக்கான நிரந்தர தீா்வை எட்ட வேண்டும். காஸாவில் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படுவதுடன், அனைத்து பிணைக் கைதிகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும். உக்ரைன் போருக்கு சா்வதேச சட்டம், ஐ.நா. கோட்பாடுகள், பிராந்திய இறையாண்மைக்கு இணங்க நியாயமான-நிலையான அமைதித் தீா்வு எட்டப்பட வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதை ஏற்க முடியாது; பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை அவசியம். பயங்கரவாதம், பிரிவினைவாதம், அடிப்படைவாத சக்திகளுக்கு எதிரான ஒத்துழைப்பைத் தொடர இந்தியாவும் நியூஸிலாந்தும் முடிவு செய்துள்ளன’ என்றாா்.

நியூஸிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள்: பிரதமா் கவலை

நியூஸிலாந்தில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனிடம் பிரதமா் மோடி கவலை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘நியூஸிலாந்தில் சில சட்டவிரோத சக்திகளின் (காலிஸ்தான் ஆதரவாளா்கள்) இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து எங்களின் கவலையை பகிா்ந்து கொண்டுள்ளோம். இத்தகைய சட்டவிரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையில் நியூஸிலாந்து அரசு தொடா்ந்து ஒத்துழைக்கும் என நம்புகிறோம்’ என்றாா்.

நியூஸிலாந்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் பிற ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாக பயன்படுத்தும் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்த இந்தியாவின் கவலையை நியூஸிலாந்து கவனத்தில் கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செயலா் ஜெய்தீப் மஜும்தாா் தெரிவித்தாா்.

உள்கட்சி நிலவரம்: கட்சி நிா்வாகிகளுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் ஆலோசனை

உள்கட்சி நிலவரம் மற்றும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகன... மேலும் பார்க்க

மணிப்பூா் முகாம்களுக்கு மாா்ச் 22 செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா். இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணல... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: 50 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. நாகபுர... மேலும் பார்க்க

குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க