திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி... போராட்டத...
ரஷிய அதிபர் புதின் அடுத்தாண்டில் இந்தியா வருகை!
ரஷிய அதிபர் புதின் அடுத்தாண்டு மே மாதத்தில் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷிய அதிபர் விளாதீமிர் புதின் அடுத்தாண்டு மே மாதத்தில், வருடந்தோறும் நடைபெறும் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா வருவார் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் புதின் வருவதற்கான சத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றன. இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஜூலை மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதினுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “இந்தியா மற்றும் ரஷியா இடையிலான உறவு வலுவாக இருக்கிறது. மேலும், புதின் இந்தியா வருகை அட்டவணை பட்டியலில் உள்ளது. அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அதற்கான அதிகாரபூர்வ தேதி விரைவில் வெளியாகும்” என்றார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த மாதம் ரஷியாவில் உள்ள கசான் நகருக்குச் சென்றிருந்தார்.
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷியாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைனை அனுமதிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவு குறித்து பெஸ்கோவ்விடம் கருத்து கேட்கப்பட்டது. அதுகுறித்து அவர் கூறுகையில், “அது மோதலை மேலும் வலுபடுத்தி போருக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்” என்றார்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனுக்கு ஆயுதக்குழுக்களை அணுப்பிய ரஷிய அதிபர் புதின், 1000 நாள்கள் கழித்து புதிய அணு ஆயுத தடுப்புக் கொள்ளைக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.